சண்டீகர்: ஹரியானா மாநிலம் நுஹ்வில் உள்ள ஜிர்கா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மம்மன் கான் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரின் வெற்றிக்கு பின்னால் ரோஹிங்கியாக்கள் இருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது.
ஹரியானா மாநிலம் நுஹ்வில் உள்ள ஜிர்கா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மம்மன் கான் 98,441 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் நசீம் அகமது வெறும் 32,056 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இந்த நிலையில்தான் மம்மன் கானின் வெற்றி பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. ஜூலை 31, 2023 அன்று நூஹில் நடந்த வகுப்புவாத வன்முறைக்கு இவர் முக்கியமான காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், அங்கே கலவரத்தை தூண்டியதாக தற்போது உபா சட்டத்தின் கீழ் விசாரணைக்கும் உள்ளாகியிருக்கிறார்.
மம்மன் கானின் வெற்றிக்கு உள்ளூர் முஸ்லிம் சமூகத்தின் வலுவான ஆதரவே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனாலும், அப்பகுதியில் வசிக்கும் சட்டவிரோத ரோஹிங்கியா முஸ்லிம்கள் அவரின் வெற்றியின் பின்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
நுஹ் மாவட்டத்தின் மக்கள் தொகையில் சுமார் 80% முஸ்லிம்கள் உள்ளனர். மேலும், சட்டவிரோத ரோஹிங்கியா குடியேற்றம் காரணமாக இம்மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்தபடியே இருக்கிறது. இந்த சூழலில்தான் கடந்த ஆண்டு நூஹ்-ல் நடந்த வன்முறையை அடுத்து கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பல ரோஹிங்கியா அகதிகளை போலீசார் கைது செய்தனர். நூஹ் பகுதியில் சுமார் 400 சட்டவிரோத குடியேற்றவாசிகள் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்தான் வகுப்புவாத கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பல ரோஹிங்கியா அகதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
அங்குள்ள மதராசாவில் உள்ள ஆசிரியர்கள் தாங்கள் மியான்மரை சேர்ந்தவர்கள் என்றும், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர் தாங்கள் நூஹில் எந்தப் பிரச்சனையும் சந்திக்கவில்லை என்றும் சில ஊடகங்களில் ரோஹிங்கியாக்கள் கூறியுள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உருது, பாஷ்டோ, பார்சி, ஆங்கிலம் மற்றும் இந்தி கற்பிப்பதாகவும், இங்கே வந்து குடியேறியுள்ள ரோஹிங்கியா அகதிகளின் குழந்தைகள் "ஹாஃபிஸ்" ஆக வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.
தங்களிடம் UNHCR அகதிகள் அட்டை மட்டுமே உள்ளது என்றும், இந்தியா வழங்கிய அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் சிலர் கூறி உள்ளனர். தற்போது மம்மன் கானின் வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு பல கடினமான கேள்விகளை இந்த விஷயம் எழுப்பி உள்ளது. வேறு நாட்டில் இருந்து குடியேறும் இது போன்ற வெளியாட்களை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? காங்கிரஸ் கட்சி ரோஹிங்கியாக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறதா? என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.