போலி ஆதார் அட்டையுடன் இந்தியாவுக்குள் நுழைந்த 4 வங்கதேச நபர்கள் கைது: மேற்கு வங்கத்தில் பரபரப்பு


கொல்கத்தா: வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சர்வதேச எல்லையை கடக்க முயன்ற 4 வங்கதேசத்தவர்கள் மற்றும் ஒரு இந்தியரை எல்லை பாதுகாப்பு படை கைது செய்தது. அவர்களிடம் இருந்து 4 போலி ஆதார் அட்டைகளையும் அதிகாரிகள் மீட்டனர்.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள இந்தியா-வங்கதேச சர்வதேச எல்லையில், நேற்று அதிகாலையில் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 4 வங்கதேசத்தவர்கள் மற்றும் ஒரு இந்திய குடிமகனை எல்லை பாதுகாப்பு படை கைது செய்தது.

4 வங்கதேச நபர்களிடமிருந்து போலி ஆதார் அட்டைகளையும் பிஎஸ்எப் மீட்டுள்ளது. விசாரணையில், அவர்கள் தினக்கூலியாக வேலை செய்ய சென்னைக்கு செல்ல இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

முர்ஷிதாபாத்தில் உள்ள பாமனாபாத் எல்லை சோதனைச் சாவடியில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்து எல்லை பாதுகாப்பு படை துருப்புக்கள் எச்சரிக்கையை எழுப்பியுள்ளது. பிடிக்க முயன்றபோது அவர்கள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றனர். பாதுகாப்பு படையினரின் கடும் எச்சரிக்கையை அடுத்து ஊடுருவல்காரர்கள் சிதறி ஓடி உயரமான புல்வெளியில் மறைந்தனர். அதன்பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தின் ராஜ்ஷாஹியில் உள்ள கோதாகாரி துணை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் போலி இந்திய ஆதார் அட்டைகளைப் பெற்றதாக நான்கு வங்கதேச நபர்களும் தெரிவித்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் போலி ஆதார் அட்டை ஆவணங்களுக்காக 1,000 வங்கதேச டாக்காவை செலுத்தியுள்ளனர். அவர்கள் விசாரணையின் பின்னர், சட்ட நடவடிக்கைகளுக்காக உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

x