மசூதியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிடுவது மத உணர்வுகளை புண்படுத்தாது: கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு


பெங்களூரு: மசூதிக்குள் "ஜெய் ஸ்ரீராம்" கோஷங்களை எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்கள் மீதான கிரிமினல் வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது, இது போன்ற செயல்கள் மத உணர்வுகளுக்கு தீங்கு விளைவிக்காது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 24, 2023 அன்று இரவு 10:50 மணியளவில் மசூதிக்குள் நுழைந்து "ஜெய் ஸ்ரீ ராம்" என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் அடையாளம் தெரியாத நபர்கள் என அறிவிக்கப்பட்ட அவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது மத உணர்வுகளை சீர்குலைத்தல், குற்றவியல் அத்துமீறல், பொதுத் தீங்கு விளைவிக்கும் அறிக்கைகள் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதி எம் நாகபிரசன்னா தலைமையிலான ஒரு நபர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த குற்றச்சாட்டுகளை நீதிபதி ரத்து செய்தார். கோஷங்கள் ஒரு சமூகத்தின் மத உணர்வுகளை எவ்வாறு புண்படுத்தும் என்று கேள்வி எழுப்பினார்.

இவ்வழக்கில் நீதிமன்றம், ‘அந்தப் பகுதியில் இந்துக்களும் முஸ்லிம்களும் இணக்கமாக வாழ்வதை புகார்தாரர் ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியானால் மேல் நடவடிக்கைகளை அனுமதிப்பது சட்ட செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதாகும். உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, இந்த செயல் ஐபிசியின் 295 ஏ பிரிவின் கீழ் குற்றமாகாது’ என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

மேலும், ‘பிரிவு 295A ஒரு சமூகத்தின் மத உணர்வுகளையோ அல்லது மத நம்பிக்கைகளையோ அவமதிப்பதன் மூலம் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்களைக் கையாள்கிறது. யாராவது 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கூச்சலிட்டால் அது ஒரு வகுப்பினரின் மத உணர்வை எப்படி சீர்குலைக்கும் என்பது புரியவில்லை. இந்தப் பகுதியில் இந்து-முஸ்லிம்கள் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள் என்று புகார்தாரரே கூறும்போது, அந்தச் சம்பவம் எந்த வித எதிர்விளைவையும் ஏற்படுத்தாது’ என நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

x