ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் உமர் அப்துல்லா: காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமில்லை!


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் முதல்வராக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா இன்று பதவியேற்றார். ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சட்டப் பேரவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவை நவ்ஷேரா தொகுதியில் தோற்கடித்த சுயேச்சை எம்எல்ஏ சுரீந்தர் சிங் சவுத்ரி, உமர் அப்துல்லா அரசாங்கத்தில் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சதீஷ் சர்மா (சுயேச்சை), சகினா இடூ, ஜாவித் தார், சன்ரிந்தர் சவுத்ரி மற்றும் ஜாவித் ராணா (அனைவரும் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவர்கள்) ஆகிய 5 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி உமர் அப்துல்லாவின் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தாலும், தேர்தலில் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால் உமர் அப்துல்லா அக்கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி மட்டும் வழங்க முன்வந்தார். ஆனால், அதை நிராகரித்த காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளது.

இன்று நடைபெற்ற உமர் அப்துல்லாவின் பதவியேற்பு விழாவில் இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவர்களான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுகவின் கனிமொழி, என்சிபியின் சுப்ரியா சூலே, சிபிஐயின் டி ராஜா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

x