பிரியாவிடை நிகழ்ச்சியில் தகராறு: கேரளாவில் துணை ஆட்சியர் மர்ம மரணம்


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட துணை ஆட்சியராக பணியாற்றி வந்தவர் நவீன் பாபு. இவர் தனது சொந்த மாவட்டமான பத்தனம்திட்டாவுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான பிபி. திவ்யாவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இருப்பினும், அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிரியாவிடை நிகழ்வில் பேசிய திவ்யா, செங்கலையில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு அனுமதி தராமல் பல மாதங்கள் இழுத்தடித்ததாக நவீன் பாபு மீது குற்றம் சுமத்தினார்.

சாதி ரீதியாக விமர்சனம்: மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் முன்னிலையில் நவீன் பாபுவை பஞ்சாயத்து தலைவர் திவ்யா சாதி ரீதியாக கடுமையாக விமர்சித்ததாக தெரிகிறது. பணிமாற்றம் பெறும் நவீன் பாபுவுக்கு நினைவுப் பரிசு வழங்க மறுத்து விழாவின் நடுவே திவ்யா வெளியேறியது நவீன் பாபுவை மனதளவில் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று கண்ணூர் குடியிருப்பில் நவீன் பாபு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரியாவிடை நிகழ்ச்சியில் நவீன் பாபுவை கேவலமாக பேசியதே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

x