சர்வதேச அளவிலான டிஜிட்டல் விதிமுறைகள் அவசியம்: இந்திய செல்போன் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்


சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ஐடியு) 8-வது உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ஐடியு) 8-வது உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் சபையை (டபிள்யுடிஎஸ்ஏ) பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இதில் 8-வது இந்திய செல்போன் மாநாட்டையும் அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

தொலைத்தொடர்பு மற்றும்அது தொடர்புடைய தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் 120 கோடி செல்போன் வாடிக்கையாளர்களும் 95 கோடி இணையதள பயனாளர்களும் உள்ளனர். மேலும் சர்வதேச அளவிலான மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது.

இங்கே டிஜிட்டல் இணைப்பு என்பது தொழில்நுட்பம் பற்றியதுமட்டுமல்ல, கடைநிலை விநியோகத்துக்கான கருவியாகவும் விளங்குகிறது. இந்தியாவில் தொலைத்தொடர்பு வசதிகளை வெறும் இணைப்புக்கான ஊடகமாக மட்டுமின்றி, சமபங்கு மற்றும் வாய்ப்புகளுக்கான ஊடகமாகவும் மாற்றியுள்ளோம். டிஜிட்டல் இந்தியாவின் நான்கு தூண்களை நாங்கள் அடையாளம் கண்டு, அவற்றில் ஒரே நேரத்தில் பணியாற்றத் தொடங்கினோம். இதற்கு எதிர்பார்த்த பலன் கிடைத்தது.

சிப் முதல் இறுதி தயாரிப்பு வரை முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செல்போன்களை உலகுக்கு வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். வெறும் 10 ஆண்டுகளில் இந்தியா அமைத்துள்ள ஆப்டிகல்ஃபைபரின் நீளம் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தைப் போல 8 மடங்கு அதிகம். இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியது.

இன்று இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இதன்மூலம் உலக அளவில் நலத்திட்டங்களை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல முடியும். டிஜிட்டல் தொழில்நுட்பத்துக் கான உலகளாவிய கட்டமைப்பு, உலகளாவிய நிர்வாகத்துக்கான உலகளாவிய வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சர்வதேச நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நமது எதிர்காலம் தொழில்நுட்ப ரீதியில் வலுவானதாகவும், தார்மீக ரீதியாகவும் வலுவானதாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். நமது எதிர்காலம் புதுமையாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.

டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கும் சர்வதேச அளவிலான நெறிமுறையை உருவாக்க வேண்டும். இணையவழிகுற்றங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக, செய்யக்கூடியவை எவை, செய்யக்கூடாதவை எவை என்பது தொடர்பான தெளிவான விதிமுறைகளை உருவாக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x