மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதி அறிவிப்பு - இண்டியா கூட்டணி வாகை சூடுமா?


புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே - பாஜக - அஜித்பவார் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிகாலம் வருகிற நவம்பர் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் மற்றும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான தேர்தல் தேதியையும் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஒரு கட்டமாகவும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும், பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வேட்புமனுத் தாக்கல் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 29ஆம் தேதியாகும். மனுவைத் திரும்பப் பெற நவம்பர் 1ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஜார்க்கண்ட்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. 81 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இம்மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் 2025 ஜனவரி 5இல் முடிவடைகிறது. இம்மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 13-ஆம் தேதி 43 தொகுதிகளில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளில் நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலத்திலும் நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நவம்பர் 13ஆம் தேதி ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் இண்டியா கூட்டணி பலமாக உள்ளது. எனவே இக்கூட்டணி இவ்விரு மாநில தேர்தல்களில் வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

x