வக்ஃப் மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம்: எதிர்க்கட்சி எம்பிக்கள் புறக்கணிப்பு


புதுடெல்லி: வக்ஃபு சட்டத்திருத்த மசோதா குறித்து விவாதிக்கும் நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டத்தை எதிர்க்கட்சி எம்.பிக்கள் புறக்கணித்துவிட்டு, கமிட்டி தலைவர் ஜெகதாம்பிகா பாலை நீக்கக் கோரி சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இக்குழு பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, சபாநாயகரிடம் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க கால அவகாசம் கேட்டுள்ளனர்.

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா குறித்து விவாதிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் நடவடிக்கைகளுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர். மேலும், இக்குழுவானது முறையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைபிடிக்கத் தவறியதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் கௌரவ் கோகோய் மற்றும் இம்ரான் மசூத், திமுகவின் ஆ.ராஜா, சிவசேனா (யுபிடி) அரவிந்த் சாவந்த், ஏஐஎம்ஐஎம்மின் அசாதுதீன் ஒவைசி, சமாஜ்வாதி கட்சியின் மொஹிப்புல்லா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் சாவந்த், “நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு ஏற்ப குழு செயல்படவில்லை. குழு அமர்வின் போது தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே போன்ற மூத்த எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்தனர். குழுவின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுடன் குழு செயல்படாததால் நாங்கள் புறக்கணித்துள்ளோம். ” என்று அவர் தனது விரக்தியை வெளிப்படுத்தினார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், ஜெகதாம்பிகா பால் தலைமையில் குழுவின் கூட்டம் தொடர்ந்தது.

வக்ஃப் திருத்த சட்ட மசோதா ஆகஸ்ட் 8 ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், இம்மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் வார இறுதிக்குள் தனது அறிக்கையை மக்களவையில் இக்குழு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

x