பட்டாசு வெடிக்க முழுமையான தடை: டெல்லி அரசு அதிரடி உத்தரவு


புதுடெல்லி: அனைத்து வகையான பட்டாசுகளையும் வெடிக்க முழுமையான தடை விதித்து டெல்லி அரசு இன்று உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் ஆன்லைன் விற்பனை உட்பட பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி சுற்றுச்சூழல் துறையின் கீழ் உள்ள மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் உத்தரவில், ‘டெல்லியில் 01.01.2025 வரை அனைத்து வகையான பட்டாசுகள் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை (ஆன்லைன் மார்க்கெட்டிங் தளங்கள் மூலம் விற்பனை உட்பட) மற்றும் அனைத்து வகையான பட்டாசுகளை வெடிக்கவும் முழுமையான தடை அமலில் இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தடையை கடுமையாக அமல்படுத்தவும், எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கைகளை தினசரி அடிப்படையில் குழுவிடம் சமர்ப்பிக்கவும் டெல்லி காவல்துறைக்கு அளிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான குளிர்கால செயல் திட்டம் 2024 இன் கீழ் டெல்லி அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த பட்டாசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகரத்தில் உள்ள மாசு நிறைந்த பல்வேறு பகுதிகளில் நிகழ்நேர காற்றின் தரத்தைக் கண்காணிப்பதற்காக டெல்லி அரசு ட்ரோன்களைப் பயன்படுத்தவுள்ளது. மாசுபாடு அதிகமுள்ள ஹாட்ஸ்பாட்களைக் கண்காணித்தல், வாகனம் மற்றும் தூசி மாசுபாட்டினை கண்காணித்தல், குப்பைகளை எரித்தல் மற்றும் தொழிற்சாலை மாசுபாட்டினை கண்காணித்தல் போன்றவையும் இந்த திட்டத்தில் அடங்கும்.

x