இனி சுங்கச்சாவடிகளில் கட்டணம் கிடையாது: மகாராஷ்டிர முதல்வர் ஷிண்டே அசத்தல் அறிவிப்பு!


மகாராஷ்டிரா: மும்பைக்குள் வரும் கார்களுக்கு இனி சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அறிவித்துள்ளார். இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் இந்த நடவடிக்கை, ‘தேர்தலுக்கான கண் துடைப்பு’ என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மும்பைக்குள் நுழைவதற்கான ஐந்து சுங்கச்சாவடிகளில் அனைத்து கார்களுக்கும் கட்டணம் கிடையாது என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மும்பையில் நடந்த மாநில அரசின் அமைச்சரவை கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகுறித்துப் பேசிய ஏக்நாத் ஷிண்டே, "இந்த நடவடிக்கை பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும். மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும். இது ஒரு வரலாற்று முடிவு" என்று கூறினார்.

மும்பையில் உள்ள தஹிசார், ஆனந்த் நகர், வைஷாலி, ஐரோலி மற்றும் முலுண்ட் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கார்கள் இனி கட்டணமின்றி பயணிக்கலாம் என்று மகாராஷ்டிர அமைச்சர் தாதாஜி டகாடு பூஸ் கூறினார். அவர், "இந்த சுங்கச்சாவடிகளில் கார்களுக்கு ரூ. 45 முதல் ரூ. 75 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. 2.80 லட்சம் இலகுரக வாகனங்கள் உட்பட சுமார் 3.5 லட்சம் வாகனங்கள் இந்த சுங்கச்சாவடிகளில் தினமும் செல்கின்றன. கார்களுக்கான சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மக்கள் வரிசைகளில் செலவழித்த நேரம் மிச்சமாகும். அரசாங்கம் பல மாதங்களாக விவாதித்து, இன்று இந்த புரட்சிகரமான முடிவை எடுத்துள்ளது" என்று கூறினார்.

ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இது குறித்து பேசிய சிவசேனாவின் (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) செய்தித் தொடர்பாளர் ஆனந்த் துபே, "நீங்கள் முன்பே சுங்கக் கட்டணத்தை ரத்து செய்திருக்கலாம், ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யவில்லை. கனரக வாகனங்கள் பல ஆண்டுகளாக சுங்கக் கட்டணம் செலுத்துகிறார்கள். அதனை ரத்து செய்யாதது ஏன்?. தேர்தலில் பொதுமக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள் ” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மகாராஷ்டிராவில், முக்கியமாக மும்பையில், சுங்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் சமீபத்தில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

x