பாஜக பயங்கரவாதிகளின் கட்சி; கொலைகளில் ஈடுபட்ட கட்சி - மல்லிகார்ஜுன கார்கே கடும் விமர்சனம்


புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி நகர்ப்புற நக்சல்களால் நடத்தப்படுகிறது என்ற பிரதமர் மோடியின் குற்றம் சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்துள்ளார். அவர், பாரதிய ஜனதா கட்சியை பயங்கரவாதிகளின் கட்சி மற்றும் கொலைகளில் ஈடுபட்ட கட்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பேசிய பிரதமர் மோடி, “தேர்தல் முடிவுகள் நாட்டின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. நகர்ப்புற நக்சல்கள் காங்கிரஸை நடத்துகிறார்கள், அவர்கள் நாட்டைப் பிரிக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்களைத் தடுக்க நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் நகர்ப்புற நக்சல்களின் பிளவுபடுத்தும் தந்திரங்களை மக்கள் நிராகரித்துள்ளனர். காங்கிரஸின் வெறுக்கத்தக்க சதிகளுக்கு மக்கள் பலியாக விரும்பவில்லை” என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியின் கருத்துகளை கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், "காங்கிரஸை நகர்ப்புற நக்சல் கட்சி என்று மோடி எப்போதும் அழைப்பார். அது அவரது பழக்கம். ஆனால், அவரது சொந்தக் கட்சியைப் பாருங்கள், பாஜக பயங்கரவாதிகளின் கட்சி, கொலைகளில் ஈடுபட்டுள்ளது. மோடிக்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூற உரிமை இல்லை" என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

x