ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லாவுக்கு 4 சுயேட்சைகள் ஆதரவு: காங்கிரஸ் தயவின்றியே கிடைத்தது பெரும்பான்மை!


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவை வழங்கினர். இதனால் காங்கிரஸ் தயவு இல்லாமலேயே அக்கட்சி பெரும்பான்மையை எட்டியது.

4 சுயேச்சைகளின் ஆதரவு கிடைத்துள்ளதால் 90 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவையான 46 சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேசிய மாநாட்டு கட்சி பெற்றுள்ளது. எனவே, ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க உமர் அப்துல்லா காங்கிரஸின் ஆதரவைப் பெற வேண்டிய அவசியமில்லை.

ஸ்ரீநகர் நகரில் உள்ள 'நவா-இ-சுபா' வளாகத்தில் உள்ள என்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உமர் அப்துல்லாவை சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து தேசிய மாநாட்டு கட்சி விரைவில் ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைக்க உரிமை கோரும். அங்கே புதிய முதல்வராக உமர் அப்துல்லா விரைவில் பதவியேற்க உள்ளார்.

இன்றைய கூட்டம் முடிந்ததும் ஜேகேஎன்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறும்போது, ​​“இன்று நடந்த தேசிய மாநாட்டு சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் நான் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எம்எல்ஏக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 4 சுயேச்சை எம்எல்ஏக்களும் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். மேலும் காங்கிரஸிடம் இருந்து ஆதரவு பெறுவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதனையடுத்து ராஜ்பவனில் ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும்” என்று கூறினார்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, துணைத் தலைவர் உமர் அப்துல்லா, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும். அவர் முதன்முதலில் 2009இல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக 38 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் தேசிய மாநாட்டு கட்சி 42, பாஜக 29, காங்கிரஸ் 6, பிடிபி 3, சிபிஎம் 1, மக்கள் மாநாடு 1, ஆம் ஆத்மி கட்சி 1 மற்றும் சுயேச்சைகள் 7 இடங்களை வென்றுள்ளன. மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் லெப்டினன்ட் கவர்னர் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை நியமிப்பார்.

x