காஷ்மீர் சட்டப்பேரவைக்கு பாஜக உறுப்பினர்களை நியமிக்க கூடாது: உமர் அப்துல்லா வலியுறுத்தல்


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்றுமுன் தினம் வெளியாகின. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்றுள்ளது. பாஜக 29 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில், சட்டப்பேரவைக்கு கூடுதலாக 5 உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரம்துணைநிலை ஆளுநருக்கு உள்ளது. இந்நிலையில், “துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தன் அதிகாரத்தை பயன்படுத்தி, 5 உறுப்பினர்களையும் பாஜகவிலிருந்தே நியமித்துவிடக்கூடாது. அவர் அப்படி நியமிக்கும்பட்சத்தில் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாட நேரிடும்” என்று உமர் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

பெரும்பான்மை பலம்: ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க 46 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். தற்போது தேசிய மாநாடுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் வென்றுள்ளது. துணைநிலை ஆளுநர் மனோஜ்சின்ஹா தன் சார்பில் கூடுதலாக5 எம்எல்ஏக்களை பாஜகவிலிருந்து நியமித்தால், சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துவிடும். இதனால், தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், பாஜகவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா செயல்படக்கூடாது என்றுஉமர் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும்கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் துணைநிலைஆளுநர், சட்டப்பேரவைக்கு பாஜகவிலிருந்து 5 உறுப்பினர்களை நியமிக்கக் கூடாது. அப்படி அவர் நியமிக்கும் பட்சத்தில் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். இது மத்திய அரசுக்கும் ஜம்மு காஷ்மீர் அரசுக்கும் தேவையற்ற மோதலை உருவாக்கும். 5 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதால், ஆட்சியில் மாற்றம் வந்துவிடப்போவதில்லை. பின்னர் இதில் என்ன பலன்? அப்படி நியமிக்கப்பட வேண்டுமென்றால், புதிய அரசுடன் கலந்தாலோசித்த பிறகே நியமிக்க வேண்டும். ஆட்சி அமைத்த பிறகு எங்கள் கூட்டணியில் சுயேட்ச்சை எம்எல்ஏக்கள் சேர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x