ஹரியானா தேர்தலில் தோல்வி ஏன்? - அலசி ஆராய்வதாக ராகுல் காந்தி தகவல்


புதுடெல்லி: ‘‘ஹரியானா தேர்தலில் எதிர்பாராத தோல்வி குறித்து அலசி ஆராய்ந்து வருகிறோம்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 இடங்களை கைப்பற்றி பாஜக 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது.ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 37 இடங்களில் வென்றுள்ளது.

காஷ்மீர் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி - காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் வென்று ஆட்சி அமைக்க உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஹரியானா தேர்தலை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மக்களுக்கு நன்றி: ஜம்மு காஷ்மீரில் இண்டியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த மக்களுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் ஹரியானா மக்களுக்கும் எங்கள் கட்சி சார்பில் கடினமாக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். அதேவேளையில் ஹரியானா தேர்தலில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

ஹரியானாவில் பல தொகுதிகளில் இருந்து நிறைய புகார்கள் வருகின்றன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம். ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்திருந்தாலும், சமூக பொருளாதார ரீதியாக மக்களுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவோம். உண்மைக்காக உங்கள் குரல் ஓங்கி ஒலிப்பதற்காக உரிமைகளுக்காகப் போராடுவோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஹரியானா, காஷ்மீர் தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல் மவுனம் காப்பது ஏன் என்று பாஜக மூத்த தலைவரும் கட்சி தகவல் தொடர்பு தலைவருமான அமித் மால்வியா கேள்வி எழுப்பியிருந்தார். இதை யடுத்து ராகுல் தனது கருத்தை கூறியுள்ளார்.

x