ஹரியானா தோல்வி எதிரொலி: உ.பி இடைத்தேர்தலில் காங்கிரஸை கழட்டிவிட்ட சமாஜ்வாதி கட்சி!


லக்னோ: ஹரியானா தேர்தலில் காங்கிரஸின் தோல்வி உத்தரப் பிரதேசத்திலும் எதிரொலித்துள்ளது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, உ.பியில் நடக்கவுள்ள 10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆலோசிக்காமல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பத்து தொகுதிகளில் ஐந்து இடங்களை காங்கிரஸ் கட்சிகோரியது. ஆனால் மக்களவைத் தேர்தல் மற்றும் சமீபத்திய ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டு, சமாஜ்வாதி கட்சி கேட்ட தொகுதிகளை வழங்க மறுத்துவிட்டது.

இதனையடுத்து உத்தரப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி இன்று அறிவித்துள்ளது. இடைத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.

இதன்படி கர்ஹாலில் தேஜ் பிரதாப் யாதவ், சிசாமு தொகுதியில் நசீம் சோலங்கி, புல்பூரிலிருந்து முஸ்தபா சித்திக், மில்கிபூரில் அஜித் பிரசாத் , கட்டேஹரி தொகுதியில் ஷோபாவாய் வர்மா மற்றும் மஜ்வான் தொகுதியில் ஜோதி பிந்த் ஆகியோருக்கு சமாஜ்வாதி கட்சி சீட் வழங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ரவிதாஸ் மெஹ்ரோத்ரா, ஹரியானா தோல்வி குறித்து காங்கிரஸை கடுமையாக சாடினார். அவர், "சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால், இன்று இண்டியா கூட்டணி ஹரியானாவில் ஆட்சியில் இருந்திருக்கும். காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சிக்கு ஒரு இடத்தைக் கூட கொடுக்கவில்லை, ஆனால் முழு மாநிலத்தையும் பாஜகவுக்கு வழங்கியுள்ளது. உ.பி.யில் இடைத்தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க விரும்புகிறோம். எனவே நாங்கள் 6 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளோம்” என்று மெஹ்ரோத்ரா கூறினார். மீதமுள்ள 4 இடங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் நம்பிக்கையில் இருப்பதாகவும் மெஹ்ரோத்ரா கூறினார்.

இதற்கிடையில், இந்திய கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவுடன் விவாதிக்காமல் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை அறிவித்தது குறித்து உபி காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே ஏமாற்றம் தெரிவித்தார்.

x