மத்திய பாஜக அரசிடமிருந்து 370வது பிரிவை மீட்டெடுக்க முயல்வது முட்டாள்தனம் - உமர் அப்துல்லா அதிரடி


ஸ்ரீநகர்: 370வது பிரிவை நீக்குவதற்கு காரணமான பாஜகவிடமிருந்து அதே பிரிவை மீட்டெடுக்க முயல்வது முட்டாள்தனமானது என்று தேசிய மாநாட்டு (என்சி) துணைத் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

2024 ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

இந்த சூழலில் பேசிய உமர் அப்துல்லா, "எங்கள் அரசியல் நிலைப்பாடு மாறாது. 370வது பிரிவு குறித்து நாங்கள் அமைதியாக இருப்போம் என்றோ அல்லது 370வது பிரிவு இப்போது எங்களுக்கு ஒரு பிரச்சினை இல்லை என்றோ நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. 370வது பிரிவை மீட்டெடுக்க வேண்டும் என்று தேர்தல்களுக்கு முன்பே நான் பலமுறை கூறியுள்ளேன். ஆனால் இதை பறித்தவர்களிடமே மீட்க கேட்டால் முட்டாள்களாகி விடுவோம். ஆனால் நாங்கள் இந்த பிரச்சினையை தொடர்ந்து பேசுவோம், உயிர்ப்புடன் வைத்திருப்போம். நாளை நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும், புதிய அமைப்பு ஏற்படும் என்று நம்புகிறோம். அவர்களிடம் இதைப் பற்றி விவாதித்து ஏதையும் பெறலாம்" என்று கூறினார்

2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது பறிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான வாக்குறுதியை நிறைவேற்றவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உமர் அப்துல்லா அழைப்பு விடுத்தார். அவர், "பிரதமர் ஒரு கெளரவமான மனிதர். அவர் தனது வார்த்தையின்படி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவார் என்று நான் நம்புகிறேன்" என்று கூறியதுடன், நாடாளுமன்றம் மற்றும் பல்வேறு பொது பேரணிகளின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை மேற்கோள் காட்டினார்.

x