காங்கிரஸ் கட்சி பொய்களை பரப்பி வெற்றிபெற முயற்சிக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு


நாக்பூர்: ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிபெற்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், "காங்கிரஸ் கட்சி பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது. தலித் சமூகத்தினரிடையே பொய்களைப் பரப்புகிறது" என்று குற்றம் சாட்டினார்.

நாக்பூரில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “ஹரியானாவில் உள்ள மக்கள் காங்கிரஸ் மற்றும் அதன் நகர்ப்புற நக்சல் கூட்டாளிகளின் வெறுப்பு சதிகளுக்கு இரையாகவில்லை என்பது தெரிகிறது. நேற்று, ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஹரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்கது.

காங்கிரஸின் ஒட்டுமொத்த அமைப்பும் பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது. அவர்கள் பொய்களை பரப்ப முயன்றனர். தலித்துகள் மத்தியில் உள்ள இடஒதுக்கீட்டை காங்கிரஸ் பறித்து, தங்கள் வாக்கு வங்கிக்கு பங்கிடும் என்பதை தலித்துகள் உணர்ந்துள்ளனர். ஹரியானாவில் விவசாயிகளைத் தூண்டியது காங்கிரஸ். பாஜகவின் விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களால் ஹரியானா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் இளைஞர்களையும் தூண்ட முயன்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் பாஜகவை நம்புகிறார்கள்” என்றார்

நாக்பூரில் 7,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின் போது, ​​மக்களிடம் பிரதமர் மோடியின் உரையாற்றினார். நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஷீரடி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை மேம்படுத்த பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

ஹரியானாவில் ஆட்சிக்கு எதிரான மனநிலையை முறியடித்து, பாஜக ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது. பாஜக 48 இடங்களை கைப்பற்றிய நிலையில், காங்கிரஸ் 37 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

x