‘ஆணவம், அதீத நம்பிக்கை’ - ஹரியானா தோல்விக்காக காங்கிரஸை கட்டம் கட்டும் இண்டியா கூட்டணி!


புதுடெல்லி: ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியிடம் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து, இண்டியா கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளன.

ஹரியானாவில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸின் முடிவு குறித்து சிவசேனா (உத்தவ் அணி) கேள்வி எழுப்பியுள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக காங்கிரஸை விமர்சித்துள்ளது. ஹரியானா சட்டசபையில் மொத்தமுள்ள 90 இடங்களில் பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 3 இடங்களிலும், இந்திய தேசிய லோக்தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் இதுபற்றி பேசுகையில், “ஹரியானாவில் இந்தியக் கூட்டணி வெற்றிபெறவில்லை, ஏனென்றால் தாங்கள் தனித்து வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் கருதியது. ஆட்சிக்கு வேறு எந்த கூட்டணியும் தேவையில்லை என்று காங்கிரஸ் தலைவர் ஹூடா நினைத்தார். அவர்கள் (காங்கிரஸ்) சமாஜ்வாடி கட்சியுடன், ஆம் ஆத்மி மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் இடங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தால் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

பாஜக இந்த தேர்தலில் போராடிய விதம் மிகவும் நன்றாக இருந்தது. காங்கிரஸ் வெற்றி பெறும் என்று எல்லோரும் நம்பினர். ஆனால் பாஜக அமைப்பு, நிர்வாகம் என ஒரு முறையான தன்மையைக் கொண்டுள்ளது. இதுவே அவர்களின் வெற்றிக்கு காரணம். அதே நேரத்தில் பரூக் அப்துல்லா தலைமையில் ஜேகேஎன்சியுடன் இண்டியா கூட்டணி போட்டியிட்டதால் அங்கே நாங்கள் வெற்றி பெற்றோம்" என்று ராவத் கூறினார்.

மகாராஷ்டிராவில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) மற்றும் சரத் பவாரின் என்சிபி-எஸ்பி கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் மற்றும் என்சிபி-எஸ்பி கூட்டணியின் முதல்வர் முகத்தை அறிவிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே நேற்று கோரியுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் அதீத நம்பிக்கை குறித்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் பிரியங்கா கக்கர் கூறுகையில், “நாங்கள் டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம். ஒரு பக்கம் அதீத நம்பிக்கை கொண்ட காங்கிரஸும், மற்றொரு பக்கம் திமிர்பிடித்த பாஜகவும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் நாங்கள் செய்ததை வைத்து தனித்து தேர்தலில் போட்டியிடுவோம்" என்று அவர் கூறினார்.

அதேபோல திரிணமூல் எம்.பி சாகேத் கோகாய், காங்கிரஸ் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் கிண்டல் செய்துள்ளார். அவர், " அவர்களின் இந்த அணுகுமுறையே தேர்தல் தோல்விக்கு வழிவகுக்கிறது. நாங்கள் வெற்றி பெறுகிறோம் என்று நினைத்தால், எந்த பிராந்திய கட்சிக்கும் இடமளிக்க மாட்டோம். ஆனால் நாங்கள் கீழே இருக்கும் மாநிலங்களில், பிராந்திய கட்சிகள் எங்களுக்கு இடமளிக்க வேண்டும். ஆணவம், தான் என்ற அகந்தை மற்றும் பிராந்தியக் கட்சிகளை இழிவாகப் பார்ப்பது பேரழிவுக்கான செய்முறையாகும்" என்று கூறினார்.

ஹரியானாவில் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய காங்கிரஸ் ஆழ்ந்து சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்

x