ஜம்மு காஷ்மீரில் 2 ராணுவ வீரர்களை கடத்திய தீவிரவாதிகள்: ஒரு வீரர் சடலமாக மீட்பு


உயிரிழந்த ராணுவ வீரர் ஹிலால் அகமது பட்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் நேற்று இரண்டு ராணுவ வீரர்கள் கடத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் தோட்டா காயங்களுடன் தப்பினார். மற்றொரு வீரர் வனப்பகுதியில் உயிரிழந்து கிடந்தார்.

அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய ராணுவ வீரர் ஒருவர் உடலில் தோட்டா காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து அக்டோபர் 8ஆம் தேதி நடத்திய கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ​​பிராந்திய ராணுவத்தின் 161 வது பிரிவைச் சேர்ந்த இரண்டு வீரர்கள், அனந்த்நாக் வனப்பகுதியில் இருந்து கடத்தப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் இரண்டு குண்டு காயங்களுடன் தப்பினார். காயமடைந்த ராணுவ வீரர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடத்தப்பட்ட ராணுவ வீரரான ஹிலால் அகமது பட், நேற்று ஆனந்த்நாக்கின் பத்ரிபால் வனப் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் சட்டசபை முடிவுகள் வெளியான நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கண்காணிக்க ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

x