மருத்துவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு: 50 முதுநிலை மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா


கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கோரியும் 10 கோரிக்கைகளை முன்வைத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 50 முதுநிலை மருத்துவர்கள் நேற்று பணியை ராஜினாமா செய்தனர்.

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு நீதி கோரியும் 10 கோரிக்கைகளை முன்வைத்தும் இரண்டு மாதங்களாக பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல், அதற்கான பிரதிநிதிகளை முறையாக தேர்வு செய்தல், பணிக்குழு அமைத்தல், கூடுதல் சிசிடிவி கேமராக்களை மருத்துவமனை வளாகத்தில் பொருத்துதல், பணியிடத்தில் கழிப்பிட வசதி ஏற்படுத்துதல், மருத்துவர், செவிலியர், சுகாதார ஊழியர்களின் காலிப்பணியிடங்களைத் துரிதமாக நிரப்புதல் உட்பட 10 கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். அரசு தங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் என்று தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி கடந்த அக்., 5-ம் தேதி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருவதை எடுத்துரைத்ததுடன் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 50 மூத்த மருத்துவர்கள் நேற்றுகூண்டோடு ராஜினாமா செய்தனர். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மேற்கு வங்க அரசை வலியுறுத்தினர்

x