ஹாியானா, காஷ்மீர் முடிவுகள் முதல் வட கொரியா மிரட்டல் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியுடன் பாஜக ஆட்சி! - ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 தொகுதிகளை வசப்படுத்தி, பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு பொய்த்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 37 இடங்கள் மட்டும் வசமானது.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆகிறார் உமர் அப்துல்லா: ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 49 தொகுதிகளை வசப்படுத்தி ஆட்சி அமைக்கிறது. தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்கள், காங்கிரஸ் 6 தொகுதிகளிள், சிபிஎம் ஒரு தொகுதியை வசப்படுத்தின. தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா தலைமையில் அங்கு கூட்டணி அரசு அமைகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் வெற்றி! - ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். 14-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில், பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் தோற்கடித்துள்ளார். ஜூலானா தொகுதியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

14 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

14 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் - அமைச்சரவை ஒப்புதல்: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரூ.38 ஆயிரத்து 698 புள்ளி 8 கோடி முதலீட்டுக்கான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த முதலீடுகள் மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சாம்சங் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப அரசு வலியுறுத்தல்: சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில், தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு, மூன்று பொறுப்பு அமைச்சர்களை நியமித்து, பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், இன்னும் போராட்டத்தை தொடர்வது ஏன் என்று தெரியவில்லை? சிஐடியு சங்கத்தை பதிவு செய்வது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால், அவ் வழக்கின் முடிவை பொறுத்து அக்கோரிக்கை குறித்து முடிவெடுக்கப்படும், என்று நிறுவனம் தெரிவித்துள்ளதால் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் பட்டாசு தயாரிக்கும்போது விபத்து: 2 பேர் பலி: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்ததில் இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர்.

ஆர்.ஜி கர் மருத்துவமனையின் 50 மூத்த மருத்துவர்கள் ராஜினாமா: கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 50 மூத்த மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு வட கொரியா மீண்டும் மிரட்டல்: கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

வங்கதேச தலைமை ஆலோசகர் யூனுஸ் தகவல்: வங்கதேசத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படாமல் தேர்தல் நடத்தப்பட்டால் அது தவறாகிவிடும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

x