இந்தியாவின் பணக்கார பெண் சாவித்ரி ஜிண்டால் ஹரியாணாவில் வெற்றி: பாஜக அமைச்சரை தோற்கடித்தார்


ஹரியாணா: சுயேட்சை வேட்பாளரும், இந்தியாவின் பணக்கார பெண்ணுமான சாவித்ரி ஜிண்டால் ஹிசார் சட்டமன்றத் தொகுதியில் 18,941 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பாஜகவின் அமைச்சர் கமல் குப்தா மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ராம் நிவாஸ் ராராவை தோற்கடித்தார்.

ஹிசார் மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ள சாவித்ரி ஜிண்டால், “ஹிசாரின் குடும்பத்திற்கு நன்றி” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜிண்டால் குடும்பத்தைச் சேர்ந்த 74 வயது சாவித்ரி ஜிண்டால் தற்போது மூன்றாவது முறையாக ஹிசார் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2005 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் அவர் காங்கிரஸ் எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார். 2013 இல் ஹரியானா காங்கிரஸ் அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றிய அவர், அந்த ஆண்டு மார்ச்சில் காங்கிரஸிலிருந்து விலகினார்.

சாவித்ரி ஜிண்டால் 2005 இல் தனது கணவர் ஓபி ஜிண்டால் இறந்ததைத் தொடர்ந்து வணிகம் மற்றும் அரசியல் உலகில் அடியெடுத்து வைத்தார். ஜிண்டால் குழுமத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கும் அவர் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், மின் உற்பத்தி, சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளார்

ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, சாவித்ரி ஜிண்டாலின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 3.65 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவர் இந்தியாவின் பணக்காரப் பெண்மணியாக உள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி (செப்டம்பர் 28, 2024) நாட்டின் ஐந்தாவது பணக்காரர் என்ற இடத்தை சாவித்ரி ஜிண்டால் பிடித்துள்ளார். இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருதை அவர் பெற்றுள்ளார். சாவித்ரி ஜிண்டால் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ரூ.80 கோடி அசையா சொத்துக்கள் உட்பட ரூ.270 கோடி மதிப்பிலான சொத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

ஹிசாரில் சாவித்ரி ஜிண்டாலுக்கு எதிராக போட்டியிட்ட பாஜகவின் கமல் குப்தா, டிசம்பர் 2021 முதல் ஹரியானாவில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சராகப் பணியாற்றினார். மருத்துவரான குப்தா, இதற்கு முன்பு 2014 மற்றும் 2019ல் இதே தொகுதியில் வெற்றிபெற்றிருந்தார்.

x