உமர் அப்துல்லாதான் ஜம்மு காஷ்மீரின் முதல்வர் - பரூக் அப்துல்லா அறிவிப்பு!


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்பார் என்று பரூக் அப்துல்லா அறிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-என்சி கூட்டணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, "10 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள் எங்களுக்குத் தங்கள் ஆணையை வழங்கியுள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் பூர்த்தி செய்ய அல்லாவை பிரார்த்திக்கிறோம். இங்கு 'போலீஸ் ராஜ்ஜியம்' நடக்காது, பொதுமக்கள் ஆட்சியாகவே இருக்கும். நிரபராதிகளை சிறையில் இருந்து விடுவிக்க முயற்சிப்போம். ஊடகங்கள் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து யூனியன் பிரதேசமாக மாறிய ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தினை மீட்டெடுக்க தேசிய மாநாட்டு கட்சி போராடுவதற்கு இந்திய கூட்டணி உதவும். உமர் அப்துல்லா முதல்வர் ஆவார்" என்று அறிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் - நேஷனல் கான்பரன்ஸ் கூட்டணி 52 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 27 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வெறும் 2 இடங்களை மட்டுமே பெறும் சூழல் உள்ளது.

x