பாஜகவை வீழ்த்த மெகபூபா முப்தி கட்சியுடன் கூட்டணிக்கு தயார்: பரூக் அப்துல்லா அறிவிப்பு


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவை ஆட்சியமைக்காமல் தடுக்க மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைக்க தேசிய மாநாட்டு கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, “மாநில மக்களின் நிலைமையை மேம்படுத்த நாம் அனைவரும் ஒரே விஷயத்திற்காக பாடுபட்டால், எப்படி போட்டியாக இருக்க முடியும். பாஜகவை ஆட்சியமைக்காமல் தடுக்க மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைக்க தேசிய மாநாட்டு கட்சி தயாராக உள்ளது. கூட்டணியில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன். இது தெளிவாக இருக்கட்டும். நான் என் வேலையைச் செய்துவிட்டேன். எப்படி வலுவான அரசாங்கத்தை உருவாக்குவது என்பதே எனது பிரச்சினையாக இருக்கும்" என்றார்

மேலும், “தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களை ஆதரவிற்காக அணுகுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் அவர்கள் முன் பிச்சை எடுக்க மாட்டேன். அவர்கள் அரசை பலப்படுத்த முடியும் என்று அவர்கள் நினைத்தால், வரவேற்கிறோம்" என்று எச்சரித்தார்.

தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரஸும் இந்தியா கூட்டணியில் இணைந்து ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிடுகின்றன. முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி தனித்துப் போட்டியிட்டுள்ளது. பாஜகவும் தனித்துப்போட்டியிட்டுள்ளது. இருப்பினும், நாளைய வாக்கு எண்ணிக்கைக்கான கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டசபை ஏற்படும் என தெரிவித்துள்ளன. எனவே இத்தேர்தலில் மெகபூபாவின் பிடிபி கட்சி கிங் மேக்கராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்புகள் என்சி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என சொல்லியுள்ளன. ஆனால் 90 உறுப்பினர்களை கொண்ட அவையில் 46 எம்எல்ஏக்கள் என்ற பெரும்பான்மையை இக்கூட்டணி அடையுமா என தெரியவில்லை. எனவே நான்கு முதல் 12 இடங்கள் வரை வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ள பிடிபி கட்சி கிங்மேக்கராக மாற வாய்ப்புள்ளது.

இதற்கு கருத்து தெரிவித்த முப்தி, “ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன்தான் மூத்த பிடிபி தலைமை "மதச்சார்பற்ற முன்னணிக்கு" ஆதரவை வழங்குவதற்கான முடிவை எடுக்கும்” என தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, "அவர்கள் ஆதரவை வழங்கவில்லை. மேலும் வாக்காளர்கள் என்ன முடிவு எடுத்துள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியாது. எனவே அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த முன்கூட்டிய ஊகங்கள் அனைத்தையும் மூடிவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.

x