ஹரியாணாவில் காங்கிரஸ் வாகை சூடுகிறது; பாஜக படுதோல்வி - எக்ஸிட் போல் முடிவுகள் வெளியீடு!


புதுடெல்லி: ஹரியாணா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஹரியாணா சட்டசபை தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஐஎன்எல்டி-பிஎஸ்பி கூட்டணி, ஜேஜேபி-ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி, ஆம் ஆத்மி கட்சி ஆகிய கூட்டணிகள் தனித்தனியே களமிறங்கின.

90 தொகுதிகள் கொண்ட ஹரியாணா சட்டமன்றத் தேர்தலில் 101 பெண்கள் மற்றும் 464 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தது, அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை திட்டமிடப்பட்டது. ஹரியாணாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியும், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக கடும் போட்டியில் இறங்கியுள்ளன.

குறைந்த பட்ச ஆதார விலை, சாதிவாரி கணக்கெடுப்பு, பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.2,000 வழங்குதல் உள்ளிட்ட ஏழு முக்கிய உத்தரவாதங்களை காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது. அக்னிவீர் திட்டம், விவசாயிகள் போராட்டங்கள், பாஜகவுக்கு எதிரான மல்யுத்த வீரர்களின் போராட்டம் போன்ற முக்கியமான பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.

ஹரியாணாவில் இன்றுதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் தனிக் பஸ்கர் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 44
- 54 இடங்களிலும், பாஜக 15 -29 இடங்களிலும், ஜேஜேபி கூட்டணி 0-1 , ஐஎன்எல்டி கூட்டணி 1 - 5 இடங்களிலும், ஆம் ஆத்மி 0 -1இடங்களிலும், இதர 4 - 9 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.

துருவ் ரிசர்ச் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 50 - 64 இடங்களிலும், பாஜக 22-32 இடங்களிலும், ஜேஜேபி கூட்டணி 0 , ஐஎன்எல்டி கூட்டணி 0 இடங்களிலும், ஆம் ஆத்மி 0 இடங்களிலும், இதர 2 -8 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.

பீப்பிள் பல்ஸ் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 49 -61இடங்களிலும், பாஜக 20 -32 இடங்களிலும், ஜேஜேபி கூட்டணி 0 -1 , ஐஎன்எல்டி கூட்டணி 2-3 இடங்களிலும், ஆம் ஆத்மி 0 இடங்களிலும், இதர 3-5 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.

ரிபப்ளிக் பாரத் மேட்ரிஸ் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 55 -62 இடங்களிலும், பாஜக 18-24 இடங்களிலும், ஜேஜேபி கூட்டணி 0 -3 , ஐஎன்எல்டி கூட்டணி 3-6 இடங்களிலும், ஆம் ஆத்மி 0 இடங்களிலும், இதர 2-5 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.

x