சத்ரபதி சிவாஜி சிலை இதனால்தான் இடிந்து விழுந்தது: பாஜகவை விளாசிய ராகுல் காந்தி


மும்பை: சத்ரபதி சிவாஜியின் சிலையை கட்டினால் அவருடைய கொள்கைகளை பின்பற்ற வேண்டும். அவரின் சித்தாந்தத்தை பின்பற்றாததால் அந்த சிலை இடிந்து விழுந்தது. பாஜக - ஷிண்டே அரசின் சித்தாந்தம் தவறானது என்ற செய்தியை அந்த சிலை அவர்களுக்கு வழங்கியது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் சத்ரபதி சிவாஜியின் சிலையை திறப்பதற்கு முன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அவர், “மக்களைப் பயமுறுத்தி, அரசியலமைப்புச் சட்டத்தையும், நாட்டில் உள்ள அமைப்புகளையும் அழித்த பிறகு சிவாஜி மகாராஜ் முன் பணிந்து எந்தப் பயனும் இல்லை. நாட்டில் இரண்டு சித்தாந்தங்கள் உள்ளன - ஒன்று சமத்துவம் மற்றும் ஒற்றுமையைப் பற்றி பேசும் அரசியலமைப்பைப் பாதுகாக்கிறது. இது சிவாஜி மகாராஜின் சித்தாந்தம். இரண்டாவது சித்தாந்தம் அரசியலமைப்பை அழிக்கும் சித்தாந்தம்.

அவர்கள் காலையில் எழுந்து, சிவாஜி மகாராஜின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பை எவ்வாறு அழிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அவர்கள் நாட்டின் நிறுவனங்களைத் தாக்குகிறார்கள், மக்களைப் பயமுறுத்துகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள், பின்னர் சிவாஜி சிலைக்கு முன்னால் வணங்குகிறார்கள். அதனால் எந்தப் பயனும் இல்லை. சிவாஜி சிலை முன் பிரார்த்தனை செய்தால், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும், “அவர்கள் சிவாஜி மகராஜின் சிலையை கட்டினார்கள், சில நாட்களில் அது இடிந்து விழுந்தது. அவர்களின் எண்ணம் சரியில்லை. சிவாஜி மகராஜின் சிலையை கட்டினால் அவருடைய கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற செய்தியை அந்த சிலை அவர்களுக்கு வழங்கியது. அதனால்தான் சிலை இடிந்து விழுந்தது. ஏனெனில் அவர்களின் சித்தாந்தம் தவறானது.

நாடு அனைவருக்கும் சொந்தமானது என்பதே சத்ரபதி சிவாஜி உலகிற்கு கூறிய செய்தி. அரசியலமைப்புச் சட்டம் அவரது இலட்சியங்களின் சின்னம். சத்ரபதி சிவாஜி, சமூக சீர்திருத்தவாதி ஷாஹு மகாராஜ் போன்றவர்கள் இல்லாவிட்டால் அரசியலமைப்புச் சட்டமே இருந்திருக்காது. சிவாஜி மகாராஜ் போராடிய அதே சித்தாந்தத்துடன் காங்கிரஸும் போராடுகிறது'' என்றார்.

கடற்படை தினமான டிசம்பர் 4, 2023 அன்று பிரதமரால் சிந்துதுர்க்கில் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஆகஸ்ட் 26 அன்று இடிந்து விழுந்தது. இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

x