“திருப்பதி லட்டுவின் தரம் மேம்பட்டுள்ளதாக பக்தர்கள் பாராட்டு” - ஆந்திர முதல்வர் பெருமிதம்


திருப்பதி: திருமலையிலுள்ள வெங்கடேஷ்வரா கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்து திருப்தி தெரிவித்தாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (அக்.5) தெரிவித்தார்.

திருமலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் (டிடிடி) நிறுவப்பட்ட மாத்ரு ஸ்ரீ வகுலமாதா அதிநவீன சமையல் கூடத்தை இன்று (அக்.5) ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருள்களின் தரத்தினை சோதனை செய்ய ஆய்வகம் அமைக்க வேண்டும். தேவைப்பட்டால், திருமலையின் செயல்பாடுகள் குறித்து டிடிடி திருப்பதி ஐஐடியை அணுகி அதன் ஆலோசனைகளைப் பெறலாம்.

இப்போது பக்தர்கள் பலர் லட்டு பிரசாதத்தின் தரம் குறித்து தங்களின் திருப்தியை வெளிப்படுத்துகின்றனர். முந்தைய ஆட்சியில், திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் தரம் குறித்து பக்தர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களின் கோபங்கள் முன்பு நிராகரிக்கப்பட்டது. இப்போது நாங்கள் பக்தர்களிடமிருந்து கருத்துக்களை பெறுகிறோம்.

தற்போதைய அரசு சுகாதாரமற்ற விஷயங்களைப் பொறுத்துக் கொள்ளாது. திருப்பதி தேவஸ்தானமும், அரசும் கடவுள் பாலாஜி மற்றும் ஸ்ரீவெங்கடேஷ்வரா சுவாமியின் புனிதம் மற்றும் தூய்மையும் பாதுகாக்கவே இங்குள்ளது. அதான் எங்களின் அர்ப்பணிப்பு. நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். நீங்கள் மேம்பாடுகளை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். எதிர்காலத்தில் நாங்கள் சரியான தீர்வினையும் சிறந்த நிர்வாகத்தினையும் ஊருவாக்குவோம்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, வெங்கடேஷ்வரா சுவாமியின் பாதுகாவலர்களான திருப்பதி தேவஸ்தானத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது பிரசாதம் தயாரிக்க சிறந்த தரமுள்ள பொருள்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். மேலும், திருப்பதியில் விஐபி கலாச்சாரம் குறைக்கப்பட வேண்டும். பிரபலங்கள் கோயிலுக்கு வரும் போது ஏற்படும் சலசலப்புகளை குறைக்க வேண்டும் என்றும் முதல்வர் ஆலோசனை வழங்கினார் என்று தேஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை இரவு திருமலையில் தங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்று, தம்பதி சமேதராக ஆந்திர அரசு தரப்பில் பட்டு வஸ்திரத்தை தலையின்மீது சுமந்து வந்தபடி கோயில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பித்தார். அதேபோல 2025-ம் ஆண்டுக்கான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நாட்காட்டி மற்றும் டைரியையும் அவர் வெளியிட்டார்.

x