“சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டார்” - கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் கருத்தால் சர்ச்சை


பெங்களூரு: விநாயக் தாமோதர் சாவர்க்கர் மாட்டிறைச்சி உண்பவர் என்றும், பசுவதைக்கு எதிரானவர் என்றும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான தினேஷ் குண்டுராவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தினேஷ் குண்டுராவ், “சாவர்க்கர் ஒரு பிராமணர், ஆனால் அவர் மாட்டிறைச்சி சாப்பிட்டார், அசைவ உணவு உண்டார். அவர் பசு வதையை எதிர்க்கவில்லை. உண்மையில், அவர் அந்த விஷயத்தில் மிகவும் நவீனத்துவவாதியாக இருந்தார். ஆனால் சாவர்க்கரின் சித்தாந்தம் அடிப்படைவாதத்தை நோக்கிச் சாய்ந்துள்ளது

அதே நேரத்தில் காந்தி இந்து கலாச்சார பழமைவாதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட கடுமையான சைவ உணவு உண்பவர். ஆனால் அவரது அணுகுமுறையில் அவர் ஒரு ஜனநாயக நபராக இருந்தார்” என்று தினேஷ் குண்டு ராவ் கூறினார்.

முகமது அலி ஜின்னாவைப் பற்றியும் தினேஷ் குண்டு ராவ் கருத்து தெரிவித்தார். ஜின்னா ஒருபோதும் கடுமையான இஸ்லாமியர் அல்ல என்று ராவ் கூறினார், சிலர் அவர் பன்றி இறைச்சி கூட சாப்பிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் ஜின்னா முஸ்லிம்களுக்கு ஒரு சின்னமானார். அவர் ஒருபோதும் அடிப்படைவாதியாக இருந்ததில்லை, ஆனால் சாவர்க்கர்தான் அடிப்படைவாதியாக இருந்தார் என்று கூறினார்.

சாவர்க்கர் குறித்த காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலளித்த கர்நாடகா பாஜக தலைவர் ஆர் அசோக், “காங்கிரஸ் எப்போதும் இந்துக்களை குறிவைப்பது ஏன்?. காங்கிரசின் கடவுள் திப்பு சுல்தான். காங்கிரஸ்காரர்களான நீங்கள் ஏன் எப்போதும் இந்துக்களை குறிவைக்கிறீர்கள்? ஏன் முஸ்லிம்களை குறிவைப்பதில்லை? தேர்தலில் இந்துக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். ஒவ்வொரு இந்துவும் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்” என்றார்

மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “ராகுல் காந்தி சாவர்க்கரை அவதூறாகப் பேசத் தொடங்கினார், இப்போது மற்றவர்கள் அவரது கருத்தை முன்னோக்கி எடுத்துச் செல்கிறார்கள். இவர்களுக்கு சாவர்க்கரைப் பற்றி எதுவும் தெரியாது. சாவர்க்கரை மீண்டும் மீண்டும் அவமதிக்கிறார்கள். பசுக்கள் பற்றிய தனது கருத்தை சாவர்க்கர் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். விவசாயிக்கு பிறந்தது முதல் இறக்கும் வரை பசு உதவுவதால், பசுவுக்கு கடவுள் அந்தஸ்து வழங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்” என தெரிவித்தார்.

x