ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களை கட்டாயம் அகற்ற வேண்டும்; பொதுமக்கள் பாதுகாப்புதான் முக்கியம்: உச்ச நீதிமன்றம்


புதுடெல்லி: பொதுமக்கள் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால் சாலைகள், நீர்நிலைகள், ரயில் பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களை கட்டாயம் அகற்றவேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் குற்றவழக்குகளில் சிக்கியவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுகின்றன. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.காவை, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

அப்போது உ.பி, குஜராத், மற்றும் மத்திய பிரதேசம் சார்பில்ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா வாதிடுகையில், ‘‘குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம்இடிக்கப்படுவதில்லை. பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம் போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபட்டாலும் அதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பதில்லை. சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மட்டுமே இடிக்கப்படுகின்றன. அதற்கு முன் அவர்களுக்கு நோட்டீஸ் பதிவு தபால் மூலம் அனுப்பப்படுகிறது. இதற்கான விதிமுறைகள் மாநகராட்சி சட்டங்களில் உள்ளன. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது மட்டும் இந்த நடவடிக்கை எடுப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, அதற்கு நீதிமன்றங்கள் உத்தரவிடுவது கவலையளிக்கிறது’’ என்றார்.

இடைக்கால தடை நீட்டிப்பு: அதன்பின் நீதிபதிகள் கூறிய தாவது: நமது நாடு மதச்சார்பற்ற நாடு. எங்களது உத்தரவுகள் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்குமானது. பொது சாலை, நடைபாதை, நீர்நிலைகள் அல்லது ரயில்வே பாதை ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால், அதை கட்டாயம் அகற்ற வேண்டும். குருத்வாரா, தர்கா, மற்றும் கோயில் போன்றவழிபாட்டு தலங்கள் பொதுமக்களுக்கு இடையூறுாக இருக்க முடியாது. அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்பதற்காக அவரது வீட்டை இடிக்கக் கூடாது. விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், மட்டுமே சொத்துகளை இடிக்க வேண்டும். கட்டிடங்களை நீதிமன்ற அனுமதியின்றி புல்டோசர் மூலம் இடிப்பதற்கான இடைக்கால தடை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

x