‘புல்டோசர்’ வழக்கு: உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன? - குற்றவாளிகள் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை புல்டோசர்களை கொண்டு இடிப்பதை பாஜக ஆளும் மாநில அரசுகள் வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், அதற்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி ஆர் கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, "ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவராகவோ அல்லது குற்றவாளியாகவோ இருப்பதால், சொத்துகளை இடிப்பதற்காக அது ஒரு காரணமாக இருக்க முடியாது. சட்ட விரோதமாக ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டால்கூட அது அரசியலமைப்பின் ‘நெறிமுறைகளுக்கு’ எதிரானது.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த வழக்கில் நாங்கள் என்ன தீர்வை முன்வைத்தாலும் அதை அனைத்து குடிமக்களுக்காகவும், அனைத்து நிறுவனங்களுக்காகவும் வைக்கிறோம். ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு ஒரு சட்டம் இருக்க முடியாது. அதேநேரத்தில், தெருக்கள், நடைபாதைகள், ரயில் பாதைகள், நீர்நிலைகள் போன்ற பொது இடங்களில் அங்கீகாரம் இல்லாத கட்டமைப்பு இருந்தால், அவற்றை இடிக்கும் வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. எங்கள் உத்தரவு எந்த பொது இடத்திலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று தெரிவித்தது. இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை புல்டோசர் நடவடிக்கை மீதான இடைக்காலத் தடை நீடிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரஜினிக்கு சிகிச்சை - மருத்துவமனை விளக்கம்: நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பான மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ செய்திக் குறிப்பில், “ரஜினிகாந்த் செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கேட்டர் முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மூத்த இதயவியல் மருத்துவர் சாய் சதீஷ், ரஜினியின் இதயத்தில் ஸ்டன்ட் பொறுத்தியுள்ளார். திட்டமிட்ட படி அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்பதை ரஜினி ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினி நலமுடன் உள்ளார். இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்.8-ல் அமைச்சரவைக் கூட்டம்: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. தமிழகத்தில் தொடர்ந்து படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் நிலையில், அது குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
“கோடீஸ்வரர்களுக்கு உதவவே பாஜக அரசு” - ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டியை அமல்படுத்தி வங்கிகளின் கதவுகளை நரேந்திர மோடி மூடிவிட்டார். அவர்கள் அதானி - அம்பானிக்கு மட்டுமே நன்மை செய்ய விரும்புகிறார்கள். இன்று இரண்டு, மூன்று கோடீஸ்வரர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே பாஜக அரசு நடத்தப்படுகிறது என்பது நாடு முழுவதும் தெரியும்” என்றார்.
“தேசப்பற்றை அழிக்க காங்கிரஸ் விரும்புகிறது” - பிரதமர்: நமது நாட்டில் இருந்து தேசப்பற்றை அழிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்றும், நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வு வலுப்பெற்றால், தங்களால் வெற்றி பெற முடியாது என்று அக்கட்சி கருதுகிறது என்றும் ஹரியானா பிரச்சாரக் களத்தில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: ஐகோர்ட் உத்தரவு: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு புதிதாக எந்தவொரு நிபந்தனையும் விதிக்கக் கூடாது என்றும், ஏற்கெனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி அனுமதி வழங்க வேண்டும் என்றும் போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“இழந்த 10% வாக்குகளை மீட்க வேண்டும்” - இபிஎஸ்: “தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளை நாம் இழந்துவிட்டோம். அதனை மீட்டுவிட்டாலே வெற்றி உறுதி” என்று சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி! - வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்துள்ளது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் 2013 தொடங்கி இன்று வரை சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனை படைத்துள்ளது இந்தியா.
லெபனானில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்? - ‘லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தவும், மத்திய கிழக்கில் பதற்றத்தை தவிர்க்கவும்..’ என்று ஐ.நா. தொடங்கி சர்வதேச அமைப்புகளும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், லெபனான் மீது தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால், அவ்வாறான தரைவழித் தாக்குதல் தொடங்கப்படவில்லை என்று ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.
பாமக Vs திமுக @ செந்தில் பாலாஜி: “மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு அன்புமணி மீது சிபிஐ குற்றச்சாட்டுப் பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து தப்பித்து கொள்ளக் கமலாலயத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் எல்லாம் செந்தில் பாலாஜி வழக்கை எதிர்கொள்ளும் திமுகவை தூற்ற கொஞ்சமும் அருகதை இல்லாதவர்கள்” என்று பாமக நிறுவனர் ராமதாஸுக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். “2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி மீது தேவசகாயம், கோபி, கணேஷ்குமார், அருள்மணி என 4 பேர் நேரடியாக புகாரளித்தனர். வழக்குத் தொடர்ந்தனர்.
அவற்றின் மீது சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தது. இவை எதுவும் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு வரவில்லையாம். செந்தில் பாலாஜி சொன்ன ஒற்றை வார்த்தையை மட்டும் நம்பிக் கொண்டு அவரை உத்தமராக ஏற்றுக் கொண்டாராம் மு.க.ஸ்டாலின். இப்படி ஒன்றுமே தெரியாத எடுப்பார் கைப்பிள்ளை முதல்வரிடம் இருந்தால் தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகும்?” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, பாமக செய்தி தொடர்பாளர் கே.பாலு பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்: போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்குகளின் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி செவ்வாய்க்கிழமை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.