மத்திய பிரதேசம்: நவராத்திரி விழா பந்தல்களுக்குள் அனுமதிக்கும் முன் மக்களை மாட்டு சிறுநீரை குடிக்கச் செய்யுமாறு இந்தூரின் பாஜக மாவட்டத் தலைவர் சிந்து வர்மா வலியுறுத்தியுள்ளது சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இந்தூர் பாஜக தலைவர் சிந்து வர்மா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “யாராவது இந்துவாக இருந்தால், அவர்கள் மாட்டு சிறுநீர் குடிப்பதை எதிர்க்க மாட்டார்கள். நவராத்திரி கர்பா பந்தல்களுக்குள் நுழைவதற்கு பக்தர்களை அனுமதிக்கும் முன், மாட்டு சிறுநீரை குடிப்பதை உறுதி செய்யுமாறு அமைப்பாளர்களை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.
இந்த கோரிக்கையின் பின்னணி குறித்து கேட்கப்பட்டபோது, “சில சமயங்களில் சிலர் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு "சில விவாதங்களை" உருவாக்குகின்றனர். ஆதார் அட்டையை திருத்த முடியும். இருப்பினும், ஒருவர் இந்துவாக இருந்தால், அவர் மாட்டு சிறுநீரை குடித்த பிறகுதான் கர்பா பந்தலுக்குள் நுழைவார், அதை மறுக்கும் பேச்சுக்கே இடமில்லை" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், வர்மாவின் பேச்சை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீலப் சுக்லா, “பசுக் காப்பகங்களின் அவலநிலை குறித்து பாஜக தலைவர்கள் மௌனமாக இருக்கின்றனர். ஆனால் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர். மாட்டு சிறுநீரை குடிக்கும் கோரிக்கையை எழுப்புவது, துருவமுனை அரசியல் செய்யும் பாஜகவின் புதிய தந்திரம். கர்பா பந்தல்களுக்குள் நுழைவதற்கு முன்பு மாட்டு சிறுநீரை உறிஞ்சி குடித்து அதன் வீடியோக்களை பாஜக தலைவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும்” என்றார்.