அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைக்க வேண்டும்: திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து


புதுடெல்லி: திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியலில் இருந்து கடவுள்களை விலக்கி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த ஜூன் 22-ம் தேதிசந்திரபாபு நாயுடு புதிய முதல்வராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்துஅவர் அண்மையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டு உள்ளது’’ என்று குற்றம் சாட்டினார். இதற்கு ஆதாரமாக குஜராத் ஆய்வகத்தின் அறிக்கையை சுட்டிக் காட்டினார்.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் கூறும்போது, “ஜெகன் ஆட்சி காலத்தில் திருப்பதிஏழுமலையான் கோயில் பிரசாதங்களுக்கு மீன் எண்ணெய், பன்றி, மாட்டு கொழுப்பு கலந்த கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, வரலாற்று ஆசிரியர் விக்ரம் சம்பத், ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர், திருமலை திருப்பதி தேவஸ்தானமுன்னாள் நிர்வாக அதிகாரி சுப்பாரெட்டி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விஸ்வநாதன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜசேகர் ராவ் கூறும்போது, “திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிதலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று கோரினார். இதே கருத்தை மனுதாரர்கள் விக்ரம் சம்பத், துஷ்யந்த் ஸ்ரீதர் தரப்பினரும் முன்வைத்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரிசுப்பா ரெட்டி தரப்பில் கூறும்போது, ‘‘திருப்பதி லட்டு பிரசாதம் தரமான நெய்யில் தயாரிக்கப்பட்டது. தற்போதைய ஆந்திர அரசு பொய் புகார்களை சுமத்துகிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

ஆந்திர அரசு சார்பில் ஆஜரானமூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகிகூறும்போது, “திருப்பதி கோயிலுக்கு விநியோகிக்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருப்பதாக ஆய்வகம் அறிக்கை அளித்து உள்ளது. கலப்பட நெய்யை விநியோகம் செய்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “இந்த விவகாரம் மக்களின் இறை நம்பிக்கை தொடர்பானது. திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய்பயன்படுத்தப்பட்டு இருந்தால், அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விஸ்வநாதன் கூறியதாவது: கலப்பட நெய் தொடர்பாக ஆந்திர அரசு சார்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த குழுவின் அறிக்கை வருவதற்கு முன்பாகவேஆந்திர முதல்வர், செய்தியாளர்களை சந்தித்தது ஏன்? அரசியல் சாசன பதவி வகிப்பவர்கள், அரசியலில் இருந்து கடவுள்களை விலக்கி வைக்க வேண்டும். கலப்பட நெய்யில் லட்டு தயாரிக்கப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை. இதை உறுதி செய்யாமல் ஊடகங்களை முதல்வர் சந்தித்தது ஏன்?

பல்வேறு நிறுவனங்கள் விநியோகம் செய்த நெய் கலக்கப்பட்டு, திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட நிறுவனத்தின் நெய் தரமற்றது என்பதை நீங்கள் கண்டுபிடித்தது எப்படி? ஆய்வக பரிசோதனைக்கு திருப்பதி லட்டு அனுப்பப்பட்டதா? இந்த விவகாரத்தில் இரண்டாவது ஆலோசனை பெறப்பட்டதா?

கலப்பட நெய் விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசின் சிறப்பு புலனாய்வு குழு தொடர்ந்து விசாரணை நடத்துமா அல்லது வேறுபுலனாய்வு அமைப்புக்கு விசாரணை மாற்றப்படுமா என்பது குறித்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெளிவான பதில் அளிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் தெரி வித்தனர்

x