லட்டு சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் காட்டம் முதல் இந்திய டெஸ்ட் அணி சாதனை வரை - டாப் 10 விரைவுச் செய்திகள்


லட்டு சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் கருத்து: திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜெகன் மோகன் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி, வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத், ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? இது குறித்து ஏன் பத்திரிகைகளுக்கு தெரிவிக்க வேண்டும்? லட்டுவில் அசுத்தமான பொருள் உள்ளதா என்பதைக் கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதா? அசுத்தமான நெய் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

பின்னர், அரசியல் சாசனப் பதவி வகிப்பவர்கள், ​​கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். இதனை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. ஆந்திர அரசு, சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. முடிவு வரும் வரை காத்திருக்காமல் பத்திரிகைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினர். மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

குன்னூரில் மண்ணில் புதைந்து ஆசிரியை உயிரிழப்பு: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்நிலையில், ஞாயிறு இரவு குன்னூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள சேட் காம்பவுண்ட் பகுதியில் பெய்த கன மழையில் திடீரென்று அங்கு நடைபாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இந்த சப்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி என்பவர் மண்சரிவில் சிக்கி கொண்டார். மேலும் வீட்டில் இருந்த அவரது கணவர் ரவி, மகள்கள் வர்ஷா, ஆயூ ஆகியோர் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து, அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து வீட்டில் சிக்கி கொண்ட மூவரையும் பத்திரமாக மீட்டனர். இருந்த போதிலும் மண்ணில சிக்கிய ஜெயலட்சுமியை 3 மணி நேரம் போராடி சடலமாக மீட்டனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘TN Alert’ செயலி: முதல்வர் அறிவிப்பு: சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய வானிலை முன்னெச்சரிக்கையால், பெரிய அளவிலான சேதங்களை நம்மால் தவிர்க்க முடியும். பேரிடர்களை எதிர்கொள்வதில், முன்னெச்சரிக்கைத் தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எனவே, அதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் நமது அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், ‘TN Alert’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

“அதானிதான் பிரதமர் மோடியின் கடவுள்!” - ராகுல்: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு குருஷேத்திரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, “அரசின் பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் அதானிக்கு செல்கிறது. பதிலுக்கு நரேந்திர மோடியும், பாஜகவும் அதானியிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுகின்றன. அதானி தனது நண்பர் நரேந்திர மோடியின் முகத்தை 24 மணி நேரமும் பல செய்தி சேனல்களில் காட்டுகிறார். நரேந்திர மோடியின் கடவுள் அதானி. அதானி என்ன சொன்னாலும் நரேந்திர மோடி செய்கிறார்” என்று பேசினார்.

நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு: பழம்பெரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் மிதுன் சக்கரவர்த்திக்கு இந்த விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதுன் சக்கரவர்த்தி இந்திய சினிமாவுக்கு ஆற்றிய ஈடு இணையில்லாத பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது நடிப்புக்காக தலைமுறை தாண்டியும் போற்றப்படுவார். அவருக்கு வாழ்த்துகள் என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் மோகன் ஜி-க்கு ஐகோர்ட் அறிவுரை: பழநி முருகன் மீது உண்மையில் அக்கறை இருந்தால் கோயில் குறித்து அவதூறு பரப்பாமல், பழநி கோயிலில் தூய்மை பணி மேற்கொள்ளலாம் அல்லது பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்தில் 10 நாள் பணியாற்றலாம், என திரைப்பட இயக்குநர் மோகன் ஜிக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அறிவுரை கூறியுள்ளது.

‘பொறுமையை சோதிக்காதீர்’- போலீஸுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில், நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என போலீஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே விதிமுறைகளை வகுத்துள்ள நிலையில், போலீஸார் பாதுகாப்பு வழங்க முடியாது என அற்ப காரணங்களைக் கூறி அனுமதி வழங்க மறுப்பது ஏன்? இவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்தால் என்ன என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.

மோடி குறித்த கார்கேவின் கருத்து - அமித் ஷா காட்டம்: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ஞாயிறன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்க நாம் போராடுவோம். எனக்கு 83 வயது ஆகிறது. நான் விரைவில் இறக்க மாட்டேன். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் உயிரோடு இருப்பேன் என்று பேசியிருந்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சு, முற்றிலும் வெறுக்கத்தக்கதாகவும், அவமானகரமானதாகவும் இருந்தது. இவ்விஷயத்தில் அவர், தனது கட்சித் தலைவர்களையும், கட்சியையும் விட விஞ்சிவிட்டார். அவரது பேச்சில் வெறுப்பின் கசப்பு வெளிப்பட்டது. பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகுதான் தான் இறப்பேன் என்று கூறி தேவையில்லாமல் தனது தனிப்பட்ட உடல்நல விஷயங்களில் பிரதமர் மோடியை இழுத்துள்ளார் என்று சாடியுள்ளார்.

தொடரும் இஸ்ரேல் தாக்குதல் - லெபனான் நிலவரம் என்ன? - லெபனான் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். 2006-இல் இஸ்ரேலுடனான மோதலில் நாங்கள் வென்றது போல், இம்முறையும் வெற்றி பெறுவோம் என்று ஹிஸ்புல்லா இயக்கம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஒரு வார காலத்துக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை லெபனானில் 87 குழந்தைகள், 156 பெண்கள் உள்பட 1030 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணி புதிய சாதனை! - டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிவேகமாக 50, 100, 200, 250 ரன்களைச் சேர்த்த அணி என்ற புதிய வரலாறு படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள்: என்னை சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கட்சித் தொண்டர்கள் தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

x