மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரிய ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனு மீது, வரும் 20-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.600 கோடி மதிப்பிலான நில மோசடி தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும், ஜார்கண்ட் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனை, அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்தது.
இந்நிலையில் நடப்பு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி, ஹேமந்த் சோரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு எதிரான மனு மீது பதிலைத் தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு வரும் மே 21ம் தேதி அன்று விடுமுறை கால அமர்வு முன்பு விசாரணைக்கு வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது.
விசாரணையில் ஹேமந்த் சோரன் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் வரும் ஜூன் 2ம் தேதி மீண்டும் சரணடைவார். வழக்கில் மனுதாரருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. இடைக்கால ஜாமீன் வழங்கப்படாவிட்டால் தேர்தல் முடிவடைந்துவிடும்.” என்றார்.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிடுகையில், "ஹேமந்த் சோரன் நீண்ட காலத்துக்கு முன்பே கைது செய்யப்பட்டு விட்டார். அவரது வழக்கமான ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்துகூட அவர் போராடவில்லை" என்று அவர் கூறினார்