ஓடுபாதைக்கு சென்ற போது விமானம் மீது மோதிய டிரக்; உயிர் தப்பிய 180 பயணிகள்; புனேவில் பரபரப்பு!


புனேவில் ஏர் இந்தியா விமானம் புறப்பட முயன்றபோது விபத்தில் சிக்கியது

மகாராஷ்டிரா மாநிலம், புனே விமான நிலையத்தில் புறப்படத் தயாராகி, ஓடுபாதைக்கு சென்றபோது, ஏர் இந்தியா விமானம் மீது இழுவை டிரக் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக 180 பயணிகள் உயிர் தப்பினர்.

மகாராஷ்டிரா மாநிலம், புனே விமான நிலையத்திலிருந்து நேற்று டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்படத் தயாரானது. இந்த விமானத்தில் 180 பயணிகள் இருந்தனர்.

புனே விமான நிலையத்திலிருந்து 'டேக்-ஆஃப்' செய்வதற்காக ஓடுபாதையை நோக்கி விமானம் சென்றபோது, எதிர்பாராதவிதமாக இழுவை டிரக்குடன் மோதி விபத்துக்குள்ளானது.

புனே விமான நிலையம்

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் விமானத்தின் முகப்பு பகுதியில் தரையிறங்கும் கியருக்கு அருகே டயரில் சேதம் ஏற்பட்டது எனவும் விமானப் பயணிகள், பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர் எனவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமானத்திலிருந்து அனைத்துப் பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, வேறு விமானத்தின் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக புனே விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏர் இந்தியா விமானம்

இதற்கிடையே இந்த விபத்து குறித்து மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த விபத்து காரணமாக புனே விமான நிலையத்தில் மற்ற விமானங்களின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் புனே விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

என் கணவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது... முதல்வர் தனிப்பிரிவில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி மனு!

x