நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்ட விரோதமானது என அறிவித்த உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.
சீனப் பிரச்சாரத்தை பரப்புவதற்காக அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கமிடமிருந்து நிதி பெற்றதாகக் குற்றம் சாட்டி, நியூஸ் கிளிக் நிறுவனரும் ஆசிரியருமான பிரபீர் புர்கயஸ்தா மீது யுஏபிஏ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 'நியூயார்க் டைம்ஸ்' செய்தி கட்டுரையின் அடிப்படையில் பிரபீர் புர்கயஸ்தா, மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதில், நாட்டின் ஸ்திரத்தன்மை, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதிப்பதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பிரபீர் புர்கயஸ்தா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தனது கைதை எதிர்த்து பிரபீர் புர்காயஸ்தா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மீண்டு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீதிபதிகள், "கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி ரிமாண்ட் உத்தரவை நிறைவேற்றுவதற்கு முன்பு, பிரபீர் புர்காயஸ்தா அல்லது அவரது வழக்கறிஞருக்கு ரிமாண்ட் விண்ணப்பத்தின் நகல் வழங்கப்படவில்லை.
இது மேல்முறையீட்டாளரின் கைது மற்றும் பின்னர் காவலில் வைக்கப்படுவதைத் தடுக்கிறது. இதன் விளைவாக, பங்கஜ் பன்சால் வழக்கில் இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், காவலில் இருந்து விடுவிப்பதற்கான வழிகாட்டுதலுக்கு மேல்முறையீட்டாளருக்கு உரிமை உண்டு.
எனவே கைது மற்றும் ரிமாண்ட், சட்டத்தின் பார்வையில் செல்லாதவை என்று அறிவிக்கப்படுகிறது. எனவே பிரபீர் புர்காயசதாவை விடுவிக்க வேண்டும். எனினும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், விசாரணை நீதிமன்றத்தின் திருப்திக்கு ஏற்ப ஜாமீன் மற்றும் பத்திரங்களை வழங்குவதற்கு அவர் உட்பட்டு விடுவிக்கப்படுவார்" என உத்தரவிட்டனர்.