பிரஜ்வல் வழக்கில் 3 நாட்களுக்குள் நடவடிக்கை... கர்நாடகா டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!


தேசிய மகளிர் ஆணையம்

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் மூன்று நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தல் செய்து அதை அவர் வீடியோவாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அவரது பென் டிரைவில், 2,976 ஆபாச வீடியோக்கள் பதிவாகி உள்ளன என்றும், அவற்றில் பல வீடியோக்கள் சில வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை ஓடக்கூடியவை என்றும் கர்நாடக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்று விட்டார்.

கர்நாடக அரசு

இந்நிலையில், ஆபாச வீடியோ வழக்கில் மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஆபாச வீடியோ வழக்கில் விரைவாக மற்றும் உறுதியான நடவடிக்கையை கர்நாடக போலீஸ் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

'பெண்களுக்கு எதிரான எந்த வடிவிலான வன்முறை அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கும் கண்டனம் தெரிவிக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் மனவருத்தம் ஏற்படுத்தும் ஊடக செய்திகளால், ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

பெண்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக ஈடுயிணையற்ற முறையில் செயல்படுகிறது. கர்நாடக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வு குழுவில் பெண் அதிகாரிகளும் சேர்க்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த விவகாரத்தில் மூன்று நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று தேசிய மகளிர் ஆணையம் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

x