மக்களவைத் தேர்தல் பணியில் இருந்த தேர்தல் அதிகாரி வெயிலில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்டத்தில் நாடு முழுவதும் 10 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பிதார் மாவட்டம் சிடகுப்பா தாலுக்காவில் உள்ள கோடம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்(31). இவர் நிர்னா கிராமத்தில் உள்ள உழவர் தொடர்பு அலுவலகத்தில் உதவி அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் உதவி அலுவலராக ஆனந்த் நியமிக்கப்பட்டார். இதனையொட்டி கோடம்பல் சோதனைச்சாவடியில் காலை 8 மணி முதல் மாலை 3 வரை நேற்று அவர் பணியில் இருந்தார். கடும் வெயிலால் ஆனந்த் மயங்கி விழுந்தார்.
இதனால், அங்கிருந்த ஊழியர்கள், தேர்தல் அதிகாரி ஆனந்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வெயிலின் தாக்கத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வெயிலின் காரணத்தால் தேர்தல் அதிகாரி உயிரிழந்த சம்பவம், பிதார் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...