குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் வாக்களித்து விட்டு வாக்குச்சாவடிக்கு வெளியே வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஒரு குழந்தைதயை தூக்கிப் போட்டு பிடித்து கொஞ்சிய அழகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், குஜராத் மாநிலம், அகமதபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாக்களித்தார். அப்போது வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்த அவர் விரலில் உள்ள மை அடையாளத்தைக் காட்டி வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். அப்போது நூற்றுக்கணக்கான பெண்கள் வாக்களிக்க பேரிகார்டு அருகே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு தாயின் கையில் இருந்த குழந்தையை பிரதமர் மோடி, வாங்கினார். இதன் பின் அந்தக் குழந்தையைத் தூக்கிப்போட்டு பிடித்தார். இதைப் பார்த்த அந்த குழந்தையின் தாய், உணர்ச்சிவசப்பட்டு கண்களை மூடிக்கொண்டார். அந்த குழந்தையை அதன்பின் பிரதமர் மோடி கொஞ்சி மகிழ்ந்தார். இந்த அழகிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதன்பின், அங்கு நின்ற பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்தார். அவரிடம் மோடி ஆசி வாங்கினார். அப்போது அவரைக் காண சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். அவர்கள், பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து மகிழ்ச்சியோடு கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர். பாரம்பரிய குர்தா பைஜாமா மற்றும் குங்குமப்பூ நிற ஜாக்கெட்டை பிரதமர் மோடி அணிந்திருந்தார்.
இதையும் வாசிக்கலாமே...