எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கேரளாவில் அதிகரித்துள்ள வெயிலின் தாக்கத்தால் நேற்று ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் பொதுவாக மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சூழல் தொடங்கி விடும். தமிழகத்தில் நிலவும் கோடை வெப்பம்போல் அங்கு இருக்காது. மிகவும் இதமான தட்பவெப்பமே நிலவும். ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ளது போலவே கேரளாவிலும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும் நிலையில், கேரளா மாநிலத்தில் பாலக்கோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கும் மேல் பதிவாகி உள்ளது. இந்த கடுமையான வெயில் காரணமாக அங்கு உயிர்பலி அதிகரித்து வருகிறது. கடந்த 26-ம் தேதி அங்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது வாக்களிக்க வந்த வாக்காளர்கள், பூத் ஏஜென்ட் உட்பட 10 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். அதைதொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பொது இடங்களுக்கு வந்த மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் கடும் வெயில் காரணமாக நேற்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் மூன்று பேர் இறந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் கட்டிட மற்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த 2 பேர் வெப்பம் காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல கோட்டயத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஷமீர் (35) என்பவர் திடீரென சுருண்டு விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இப்படி கேரளாவில் நேற்று ஒரே நாளில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.