இந்தியாவின் 2 பிரபல மசாலா பொருட்களுக்கு சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் தடை எழுந்ததை அடுத்து, அமெரிக்காவும் மேற்படி மசாலாக்களின் புற்றுநோய் பூச்சிக்கொல்லி வீரியத்தை ஆராய முன்வந்திருக்கிறது.
எவரெஸ்ட், எம்.டி.ஹெச்., என இந்தியாவில் தயாராகி ஏற்றுமதி செய்யப்படும் 2 மசாலா பொருட்களில், புற்றுநோயை உருவாக்கும் பூச்சிக்கொல்லிகள் அதிகம் இருப்பதாக சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் புகார்கள் எழுந்தன. இதனால் அங்கிருந்து அந்த மசாலாக்கள் திரும்பப்பெறப்பட்டன. தற்போது இந்த மசாலாக்களின் புற்றுநோய் பின்புலம் குறித்து அமெரிக்காவும், தனது உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) வாயிலாக ஆராய முன்வந்திருக்கிறது. இது இந்திய மசாலா நிறுவனங்களுக்கு கவலை தந்திருக்கிறது.
இந்தியாவில் தயாராகி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மசாலா பொருட்களின் சுகாதார அச்சுறுத்தல் குறித்தான தங்களது மதிப்பாய்வை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. இவை இந்தியாவில் தயாராகும் ஏற்றுமதிக்கான மசாலா பொருட்கள் வணிகத்தை அதிகம் பாதித்துள்ளன. இது தொடர்பாக பதிலளித்திருக்கும் எவரெஸ்ட் நிறுவனம் தங்களது மசாலா பொருட்கள் நுகர்வுக்கு பாதுகாப்பானது என்றும் ’இந்திய மசாலா வாரியத்தின் ஆய்வகங்களில் இருந்து தேவையான அனுமதிகள் மற்றும் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அதன் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன’ என்றும் தெரிவித்து இருந்தது.
மற்றொரு மசாலா நிறுவனமான எம்டிஹெச், தங்கள் தயாரிப்புகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ‘அடிப்படையற்ற, உண்மைக்குப் புறம்பான மற்றும் ஆதாரம் இல்லாதது’ என்று புறக்கணித்துள்ளது. மேலும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கும் வகையில், "உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அவசியமான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை நாங்கள் கடைபிடிக்கிறோம்" என்று உறுதி தெரிவித்தது. ஆனால் இதே மசாலா நிறுவனம் 2019-ல் ஒரு முறை அமெரிக்காவில் சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சாம்பார் பொடி வயிற்றுப்போக்கை உருவாக்குவதாக கூறி, குறிப்பிட்ட தயாரிப்புகள் திரும்பப்பெறப்பட்டன. இந்த விவகாரத்துடன் தொடர்புடைய ’சால்மோனெல்லா’ மாசுபாடு குற்றச்சாட்டு காரணமாக, கடந்த 6 மாதங்களில் எம்டிஹெச்சின் 31 சதவீத மசாலா பொருட்களின் ஏற்றுமதியை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
ஏதோவொரு மசாலா நிறுவனத்தின் தயாரிப்புக்கு எதிரான சர்ச்சை என்பதாக, இதனை இந்திய மசாலா நிறுவனங்கள் விடுவதாக இல்லை. அமெரிக்காவின் ஆய்வு ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் இந்தியாவின் சகல மசாலா தயாரிப்புகளின் ஏற்றுமதி மற்றும் விற்பனையை பாதிக்க வாய்ப்புள்ளது. அதன்படி இந்திய மசாலா வாரியம், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் ஏற்றுமதி மற்றும் விற்பனைகள் தொடர்பான தரவைக் கோரியுள்ளது. மசாலா ஏற்றுமதிக்கான இந்திய ஒழுங்குமுறை நிறுவனமும், இந்த விவகாரத்தை சீரியசாக ஆராய்கிறது. அந்தந்த ஆலைகளில் ’ஒழுங்குமுறை தரநிலைகளை கடைபிடிப்பதை உறுதிசெய்வதற்கான ஆய்வுக்கும்’ உத்தரவிட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!
தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!
தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!
அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!
பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!