முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!


சாதனை மாணவி பிராச்சி நிகம்

10ம் வகுப்புத் தேர்வில் 98 சதவீத மதிப்பெண்கள் பெற்றும் சாதனைக்காக பாராட்டப்படாமல், உருவ கேலி செய்யப்பட்டதால் தான் முதலிடம் பெறாமலேயே இருந்திருக்கலாம் என மாணவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10ம் வகுப்புத் தேர்வில், பிராச்சி நிகம் என்ற மாணவி, மொத்தம் உள்ள 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண் (98.50 சதவீதம்) பெற்று முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தார். இந்நிலையில் இந்த மாணவியின் சாதனையைப் பாராட்டாமல் பலரும் அவரது முகத்தில் வளர்ந்திருந்த முடி, தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் 'ட்ரோல்' செய்தனர்.

மாணவி பிராச்சி நிகம்

இதன் காரணமாக மாணவி பிராச்சி நிகம் இந்தியளவில் கவனம் ஈர்த்தார். இந்நிலையில் மாணவியின் கல்வி சாதனையைப் பாராட்டாமல் அவரது தோற்றத்தை வைத்து கேலி செய்த சமூக ஊடக பதிவை கண்டித்தும் சிலர் எதிர் பதிவுகளை வெளியிட்டனர்.

இச்சூழலில் தான் உருவகேலிக்கு உள்ளாக்கப்பட்டதற்கு முதல் மதிப்பெண் எடுக்காமலே போயிருந்திருக்கலாம் என மாணவி பிராச்சி நிகம் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் பிராச்சி நிகாம், கூறுகையில், “நான் ஓரிரண்டு மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்தால் சமூக ஊடகத்தில் பிரபலமாகியிருக்க மாட்டேன். மேலும், எனது தோற்றத்துக்காக ட்ரோலில் சிக்கியிருக்க மாட்டேன். இது என்னை புண்படுத்துகிறது. ஆனால் சமூக ஊடகங்களில் உள்ளவர்கள் தாங்கள் விரும்பியதை சொல்வார்கள். அவர்களைத் தடுக்க முடியாது” என கூறியுள்ளார்.

பிராச்சி நிகம், எதிர்காலத்தில் ஒரு பொறியியலாளராக வர வேண்டும் என விரும்புவதாகவும், தனது கனவுகளைப் பின்தொடர்வதில் முழுமையாக கவனம் செலுத்துவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தனது மகளை உருவகேலி செய்த விவகாரம் குறித்து பிராச்சி நிகம் தாயார் மம்தா நிகம் கூறுகையில், "எனது மகளை ட்ரோல்களைப் புறக்கணிக்க ஊக்குவித்தேன்.

ஆச்சரியமாக, பல சமூக ஊடக பயனர்கள் சில நாட்களுக்குப் பிறகு எனது மகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்தனர். எனது மகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறலாம் என்று இருந்தோம். ஆனால் அதற்குள் அவரை கேலி செய்தனர். இப்போது எனது மகளின் மருத்துவ செலவை அரசு மேற்கொள்ளும்" என்றார்.

பிராச்சியின் தந்தை சந்திர பிரகாஷ் நிகம் கூறுகையில், "சமூகத்தில் பலதரப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். எங்கள் மகளை உருவ கேலி செய்ததால் நாங்கள் மிகவும் கவலையடைந்தோம். அதே நேரத்தில், அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக எங்கள் மகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்றார்.

இதற்கிடையே ‘பாம்பே ஷேவிங் கம்பெனி’ ஒன்று மாணவி பிராச்சி நிகமுக்கு ஆதரவாக நாளிதழ் ஒன்றில் முழு பக்கம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

அதில், 'அன்புள்ள பிராச்சி, அவர்கள் இன்று உங்கள் முடியை ட்ரோல் செய்கிறார்கள், நாளை உங்கள் அகில இந்திய தரவரிசையை (ரேங்க்) பாராட்டுவார்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.

x