அமேதி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஹெல்மெட் அணிந்து டூவீலரில் மக்களிடம் வாக்குசேகரித்து வருவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தேல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட முதல்கட்டத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மூன்றாம் கட்டத் தேர்தல் மே 7-ம் தேதி நடைபெறுகிறது. நான்காம் கட்டத்தேர்தல் மே 13-ம் தேதியும், ஐந்தாம் கட்டத்தேர்தல் மே 20-ம் தேதியும், ஆறாம் கட்டத்தேர்தல் மே 25-ம் தேதியும், ஏழாம் கட்டத்தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் வாக்காளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் மே 20-ம் தேதி ஐந்தாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ள இரானி, மக்களிடம் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக ஹெல்மெட் அணிந்து டூவீலரில் வீதியாக, வீதியாகச் சென்று இரானி வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு அவர் வாக்குசேகரித்த போது பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இரானியின் எளிமையான பிரச்சார வடிவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.