இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து


வாட்ஸ் அப்

பாதுகாப்பு அம்சமான என்கிரிப்ஷனை உடைக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களால் வாட்ஸ் -அப் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவான தகவல் பரிமாற்றத்திற்காக இந்த ஆப்பை பலரும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் தகவல்களை பத்திரமாக வைத்துக் கொள்வதற்காக வாட்ஸ் -அப் நிறுவனம் 512 பிட் என்கிரிப்ஷன் என்ற பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்துகிறது. அதாவது நீங்கள் அனுப்பும் தகவலில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் 512, 0 மற்றும் 1 என பிரித்து சேமித்து வைக்கப்படும். இதனால் அதனை மீண்டும் ஒருங்கிணைத்து அந்த செய்தியை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். இதனால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும்.

டெல்லி உயர் நீதிமன்றம்

இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் இந்திய அரசு மாற்றத்தை கொண்டு வந்தது. பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்கள் இச்சட்டத்தை மீறுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. இதனை எதிர்த்து இந்நிறுவனங்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாட்ஸ்- அப் என்கிரிப்ஷன் காரணமாக, போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் நிலவுவதாக தெரிவித்தார். மேலும் இதுபோன்ற போலி செய்திகள் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை குலைத்து விட கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு வாட்ஸ் ஆப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா கடும் கண்டனம் தெரிவித்தார். ”உலகில் எந்த நாட்டிலும் இதுபோன்ற சட்டங்கள் இல்லை. இந்த சட்டம் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை உள்ளிட்டவற்றை மீறுகிறது. இதுபோன்ற சட்டங்களால் லட்சக்கணக்கான செய்திகளை பல ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டிய நிலை உருவாகும். இது போன்ற சட்டம் கொண்டுவரப்பட்டால் இந்தியாவிலிருந்து வாட்ஸ் அப் வெளியேற வேண்டி இருக்கும்” என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்தி வைத்தனர். இந்த புதிய சட்டம் மூலமாக, வாட்ஸ்-அப்பில் அனுப்பப்படும் ஒரு தகவல் குறித்த சந்தேகம் எழுந்தால், அரசு கோரும் போது, என்கிரிப்ஷனை உடைத்து வாட்ஸ் அப் நிறுவனம் தகவல் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

x