எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக நிலை, நிறமாலை போன்ற அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ள பி.எஸ்.எல்.வி.சி- 58 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
பி.எஸ்.எல்.வி.சி- 58 ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இது இன்று காலை 9.10 மணிக்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்போசாட் செயற்கைக்கோளில், 'எக்ஸ்ஸ்பெக்ட், பொலிக்ஸ்' போன்ற அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. மொத்தம், 469 கிலோ எடை உடைய செயற்கைக்கோள், பூமியில் இருந்து, 650 கி.மீ., தொலைவில் உள்ள புவி சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
பி.எஸ்.எல்.வி.சி- 58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கைத்தட்டி கொண்டாடினார்கள். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, இஸ்ரோ தலைவர் சோம்நாத், ‘’மிகவும் வெற்றிகரமாக இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் இது புத்தாண்டு பரிசாக உள்ளது. பி.எஸ்.எல்.வி.சி- 58 ராக்கெட்டில் இருந்து செயற்கைகோள் தனியாக பிரிந்துள்ளது. இன்னும் சில நிமிடங்களில் புவியின் தாழ்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்’’ என்றார்.