கல்லூரி மாணவி நேஹாவை கொலை செய்த என் மகனுக்கு வழங்கப்படும் தண்டனை இதுபோன்ற செயல்களில் இனிமேல் யாரும் ஈடுபடக்கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஃபயாஸின் தந்தை பாபா சாகேப் சுபானி கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் உள்ள சவடத்தி தாலுகாவில் உள்ள முனவல்லியைச் சேர்ந்தவர் ஃபயாஸ். இவர் ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் பிசிஏ படித்து வந்தார். இவருடன் படித்த நேஹா என்ற மாணவியை ஃபயாஸ் ஒரு தலையாக காதலித்து வந்தார். அவர் நேஹாவிம் தனது காதலை கூறியுள்ளார்.
ஆனால், ஃபயாஸின் காதலை நேஹா ஏற்க மறுத்தார். அத்துடன் அவருடன் நண்பராக பழகுவதையும் தவிர்த்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நேற்று முன்தினம் நேஹாவை கல்லூரிக்குள் கத்தியால் குத்தி ஃபயாஸ் படுகொலை செய்தார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி ஃபயாஸ்க்கு கூடுதல் தண்டனை வழங்க வேண்டும் என்று திரையுலகினரும் குரல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஃபயாஸின் தந்தை பாபா சாகேப் சுபானி விஸ்டார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி அளித்துள்ளார். அதில், “என் மகனின் தவறுக்காக முனவல்லி மற்றும் கர்நாடகாக மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து எந்த இளைஞர்களும் எனது மகனைப் போன்ற செயலில் செய்ய வேண்டாம்.
நான் யாருக்கும் எந்தத் தீமையும் செய்ததில்லை. இப்போது என் மகன் நாட்டின் முன் தலைகுனியும் வேலையைச் செய்திருக்கிறான். எனவே, சாகும் வரை முனவல்லி மக்களுக்கு சேவையாற்றுவேன்" என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் "இதுபோன்ற சம்பவங்களால் நாளை தங்கள் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மக்கள் அச்சப்படுவார்கள். ஒரு வருடம் முன்பு, நேஹாவின் அப்பா இரண்டு முறை என்னை அழைத்துப் பேசினார். எனது மகளை உங்கள் மகன் துன்புறுத்துகிறான் என்று கூறினார். இதனால் என் மகனைக் கண்டித்தேன். ஆனால், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று அவன் கூறினான்.
ஆனால், நான் இதை நம்பவில்லை. இதனால் அவனுக்கும், எனக்கும் சண்டை வந்தது. இதன் காரணமாக என்னிடம் அவன் பேசுவதில்லை. என் மகனை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அவன் இப்படியான மோசமான வேலையை செய்துள்ளான். அவனுக்கு வழங்கப்படும் தண்டனை இது போன்ற செயல்களில் இனிமேல் யாரும் ஈடுபடக்கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!
சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!