தாய்ப்பால் விற்பனைக்கு மத்திய அரசு தடை


புதுடெல்லி: வணிக ரீதியில் தாய்ப்பால் விற்பனை செய்வதை உடனே நிறுத்துமாறு தாய்ப்பால் வங்கிகளுக்கு உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எஃப்எஸ்எஸ் சட்டம் 2006 விதிகளின்படி, தாய்ப்பாலை பதப்படுத்துதல் மற்றும் அதை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படவில்லை.

எனவே, தாய்ப்பால் மற்றும் அதன் தயாரிப்புகளை வணிகமயமாக்குவது மற்றும் அதுதொடர்பான நடவடிக்கைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும். விதிகளை மீறினால் உணவு வணிக நிறுவனங்கள், தாய்ப்பால் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தாய்ப்பால் பதப்படுத்துதல், விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை என மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x