ராஜஸ்தான் மாநிலம், தோல்பூரில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ராணுவத்தின் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்பட்ட பணம் முழுவதையும் அதானிக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளதாக கூறினார். மேலும், பிக்பாக்கெட் அடிப்பவர்கள் தனியாக வருவதில்லை. அவர் குழுவாக தான் வருவார்கள். குழுவில் ஒருவர் முன்னே வந்து கவனத்தைத் திசை திருப்புவார், மற்றொரு நபர் பின்னால் இருந்து வந்து பிக்பாக்கெட் அடித்து விடுவார்.
அதுபோல மோடி தொலைக்காட்சியில் வந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிறார். அதானி பின்னால் வந்து மக்கள் பணத்தை எடுத்துச் செல்கிறார். இடையில் யாராவது வந்தால் அவர்கள் மீது அமித் ஷா தடியடி நடத்துவார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதுதொடர்பாக பாஜகவினர் ராகுல் காந்தி மீதும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீதும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுதொடர்பாக அவர் விளக்கமளிக்கவில்லை. இந்நிலையில், பரத்நாகர் என்ற வழக்கறிஞர் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும், இதுதொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வர நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ராகுல் காந்தி பிரதமரை அவதூறாக பேசியது சரியானது அல்ல என கூறியது. மேலும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் 8 வாரங்களுக்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், இதுதொடர்பாக, ராகுல் காந்தி மீது வழக்கு தொடர உத்தரவிட முடியாது, அவதூறு பேச்சுக்கள் தொடர்பாக நெறிமுறைகளை வகுக்க நாடாளுமன்றத்திற்கும் உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது.