தொடரும் தற்கொலைகள்... டீன் ஏஜ் வயதினருக்கு வலுவான ஆதரவு தளத்தை ஏற்படுத்த வேண்டும்; மன நல ஆலோசகர் யோசனை!


நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீப காலமாக சமூகத்தில் டீன் ஏஜ் வயதினரிடையே தற்கொலைகள் அதிகரித்து வருவது, கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2021 அறிக்கையின்படி, பெரும்பாலான தற்கொலைகள் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளன. அங்கு 22,207(13.5%) தற்கொலைகள், தமிழகத்தில் 18,925 (11.5%) தற்கொலைகள், மத்தியப் பிரதேசத்தில் 14,965 (9.1%) தற்கொலைகள், மேற்கு வங்காளத்தில் தற்கொலைகள் 13,500 தற்கொலைகள் ( 8.2%) மற்றும் கர்நாடகாவில் 13,056 (8.0%) தற்கொலைகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் 2021 ம் ஆண்டில் 13,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு நாளும் 35 க்கும் அதிகமானோர் என்ற விகிதத்தில் இறந்துள்ளனர். இது 2020 இல் 12,526 இறப்புகளில் இருந்து 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், 18 வயதிற்குட்பட்ட 10,732 தற்கொலைகளில் 864 பேர் ‘தேர்வில் தோல்வி’ காரணமாக நடந்துள்ளது.

ராஜசவுந்தர பாண்டியன்

இதுகுறித்து மதுரை கே.கே.நகரை சேர்ந்த மன நல ஆலோசகர் ப.ராஜசவுந்தரபாண்டியன் விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

"நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது தற்கொலை செய்ய நினைப்பவர்களின் அறிகுறிகள். சமுதாயத்தில் இருந்து தனிமையாக இருத்தல், தற்கொலை பற்றி அதிகமாக பேசுதல், மரணம் பற்றி பேசுதல், தேவையில்லாமல் மாத்திரை, கத்தி போன்றவற்றை வாங்குதல், தூக்கத்தில் பிரச்சினை, சரியாக சாப்பிடாமல் இருப்பது, போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருத்தல், செய்யும் வேலை அல்லது படிப்பில் பிரச்சினை, எப்பொழுதும் ஒருவித பதற்றத்துடன் காணப்படுதல், எளிதில் எரிச்சலடைதல், மவுனமாக இருத்தல், குற்ற உணர்ச்சி, மனநலம் பாதிப்பு, நம்பிக்கை இல்லாமல் பேசுவது, தற்கொலை முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டிருப்பவர்கள் போன்றவை தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன.

டீன் ஏஜ் தற்கொலைகளைத் தடுப்பதில் ஒரு பெரிய தடையாக இருப்பது மனநல பிரச்சினைகளை பற்றிய தவறான எண்ணம்.

பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகம் ஆகியவை மனநலம் பற்றிய வெளிப்படையான உரையாடல்களை ஊக்குவிக்கும் சூழலை வளர்க்க வேண்டும். உதவியை நாடுவது மன வலிமையின் அடையாளம், பலவீனம் அல்ல என்பதை நாம் வலியுறுத்த வேண்டும்.

டீன் ஏஜ் பருவத்தினர் கல்வி சார்ந்த மன அழுத்தம் மட்டுமில்லாது சமூக அழுத்தங்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகள் வரை எண்ணற்ற சவால்களை எதிர்கொள்கின்றனர். ஒரு வலுவான ஆதரவு தளத்தை உருவாக்குவது டீன் ஏஜ் வயதினருக்கு முக்கியமானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும், அவர்கள் உங்களிடம் பிரச்சினைகளை கொண்டு வந்தால் காது கொடுத்து கேட்க வேண்டும். மேலும் அவர்களின் கவலைகளைப் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான இடத்தை வழங்க வேண்டும்.

பள்ளிகள் மற்றும் சமூகங்கள் ஆலோசனை சேவைகள் மற்றும் மனநல கல்வி திட்டங்களை வழங்க வேண்டும். டீன் ஏஜ் பருவத்தினர் நெருக்கடியில் இருக்கும் போது யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அது ஒரு அமைப்பாகவோ மனநலத்துறை சார்ந்தவராகவோ அல்லது நம்பிக்கை உள்ள ஒரு பெரிய மனிதராகவோ இருக்கலாம்.

பதின் வயதினருக்கு சமாளிக்கும் திறன் மற்றும் மீள்தன்மையை கற்பிப்பது தற்கொலை தடுப்புக்கான மற்றொரு முக்கிய அம்சமாகும். எந்தப் பதின்ம வயதினரும் தனியாகவோ அல்லது உதவியின்றியோ இருப்பது போன்று உணராமல் பார்த்து கொள்வது நமது ஒவ்வொருவரின் கடமையாகும் ’’ என்றார்.

x