புதுடெல்லி: ஹரியானாவில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டங்களில் பாகிஸ்தான் வாழ்க கோஷத்தை கேட்டு, ராகுல் காந்தி அமைதியாக இருப்பது ஏன்? என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 5-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பத்ஷாபூரில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய தாவது:
ஹரியானாவில் தற்போது புதுவிதமான போக்கை காண முடிகிறது. இங்கு பல இடங்களில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் ‘பாகிஸ்தான் வாழ்க’ கோஷம் எழுப்பப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் பாகிஸ்தான் வாழ்க எனகோஷமிடும் போது, அமைதியாகஇருப்பது ஏன்? என ராகுல்காந்தியிடம் நான் கேட்க விரும்புகிறேன். திருப்திபடுத்துவதில் காங்கிரஸ் கட்சி கண்மூடித்தனமாக உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 370-வதுசட்டப்பிரிவை மீண்டும் கொண்டுவருவோம் என ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார். காஷ்மீர் நமது நாட்டைச் சேர்ந்தது இல்லையா? 370-வது பிரிவு சிறப்பு சட்டம் அகற்றப்பட வேண்டுமா அல்லது இல்லையா? அதை மீண்டும் கொண்டு வருவேன் என ராகுல் காந்தி கூறுகிறார். ராகுல் காந்தியின் 3 தலைமுறையினர் வந்தாலும், 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டுவர முடியாது. காஷ்மீரை பாதுகாக்க ஹரியானா இளைஞர்கள் பல தியாகங்களை செய்துள்ளனர். அதை நாங்கள் வீண்போக விடமாட்டோம்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வக்பு வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வரும். வக்பு வாரிய சட்டம் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அதை குளிர்கால கூட்டத்தொடரில் நாங்கள் மேம்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்